• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மகாகவி பாரதி பிறந்த டிசம்பர் 11ஆம் தேதியை பத்திரிகையாளர் தினமாக அறிவிக்க வேண்டும்.., உதகை தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் மாநில மாநாட்டில் வலியுறுத்தல்…

ByKalamegam Viswanathan

Oct 29, 2023

உதகையில் நடைபெற்ற தமிழக பத்திரிகையாளர்கள் சங்க முதல் மாநாட்டில், மகாகவி பாரதி பிறந்த டிசம்பர் 11ஆம் தேதியை பத்திரிகையாளர் தினமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு மாநில தலைவர் ஏ.பி.ஹரிஹரன், பொதுச் செயலாளர் ஏ.பாஷா ஆகியோர் தலைமை வகித்தனர். மாநிலத் துணைத் தலைவர் எம்.எஸ். மணி, மாநில பொருளாளர் சரித்திரம் பிரபு, மாநில முதன்மை செய்தி தொடர்பாளர் சி.எம்.ஆதவன், சென்னை மண்டல தலைவர் கே. என். வடிவேலு, மாநில செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ஆர். குமரன், சரவணன் ஞான பாஸ்கரன், வீரபாகு, தென்மண்டல தலைவர் கே.எஸ்.பாலகிருஷ்ணன், மதுரை மண்டல தலைவர் டி.சண்முகம், மண்டல செயலாளர் அசோக்குமார், மண்டல ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜன், மேற்கு மண்டல அமைப்பாளர் கோவிந்தராஜ்,
, அலெக்சாண்டர், கிங்ஸ்டன், நிர்வாகிகள் வேளாங்கண்ணி, டேனியல் கார்த்திகேயன், ராஜேஷ், முனியசாமி, செந்தில் குமார், தங்கராஜ் உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
நீதியரசர் ராம பார்த்திபன், வருமான வரித்துறை கண்காணிப்பாளர் முருகன், மருத்துவக் கல்லூரி பேராசிரியர் அன்பானந்தம், உதகை சுற்றுலா துறை அதிகாரிகள் உட்பட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில், தமிழகம் முழுதும் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு சமூக சேவைக்கான விருதுகள் மற்றும் சிறந்த நிர்வாகிகளுக்கான விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மதுரையின் அட்சய பாத்திரம் என்ற பெயரில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வரும் நெல்லை பாலு, சுயமாக சம்பாதித்த பணத்தில் அரசு பள்ளிகளுக்கு நிதி உதவி வழங்கி வரும் வத்தல் வியாபாரி ராஜேந்திரன், மக்கள் பயன்பாட்டிற்காக இலவச அமரர் ஊர்தி மற்றும் மரக்கன்றுகளை வழங்கி வரும் அசோக் குமார், தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேஷன் சவரிமுத்து, மக்கள் நல மருத்துவர் நடேசன் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், பத்திரிகையாளர் தனது பணிக்காலத்தில் இறந்து விட்டால், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அவர்களின் குழந்தைகளுக்கு அனைத்து பிரிவு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு மற்றும் கட்டணச் சலுகை வழங்கிட வேண்டும். தமிழ்நாடு அரசு, பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சட்டம் இயற்றி, பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்கும் போது தாக்கப்பட்டால் சட்டத்தின் மூலமாக, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது பாரபட்சம் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டு மனை வழங்குவதற்கு பதிலாக, அந்தந்த மாவட்டம் மற்றும் தாலுக்கா வாரியாக மானிய விலையில், “பத்திரிகையாளர் குடியிருப்பு வளாகம்” என பெயரிட்டு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், பத்திரிகையாளர் ஓய்வூதிய பணிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் குறைத்தல், உயர்த்தப்பட்ட ரூ.12 ஆயிரம் உதவி தொகையை விரைந்து வழங்குதல், சிறந்த பத்திரிகையாளர்களுக்கு, ஆண்டு தோறும் விருது வழங்கல், எழுத்துக்களின் மூலம் சுதந்திரத்திற்கு எழுச்சி உணர்வுகளை ஊட்டிய, மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் பிறந்த டிசம்பர் 11ஆம் தேதியை பத்திரிகையாளர் தினமாக அறிவித்தல் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.
மேலும், தினமலர் நாளிதழ் நிறுவிய அமரர் டி.வி.ராம சுப்பையர் அவர்களின் சமூகப் பணியைப் பாராட்டியும், குரல் அற்றவர்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும், தமிழ்ச் சமூகத்திலும், பத்திரிகை உலகிலும் இன்றுவரை தவிர்க்க முடியாத பத்திரிகையாக திகழும் ஜூனியர் விகடன் நிறுவிய, பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும் மத்திய அரசு ‘பத்ம விருது’ மற்றும் ‘பாரத ரத்னா’ வழங்கி கவுரவிக்க வேண்டும்” என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தமிழக பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.