• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கதியற்ற தமிழக மீனவர்கள்.. செயலற்ற இந்திய அரசு – மக்கள் நீதி மய்யம் அறிக்கை!..

Byமதி

Oct 22, 2021

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் மீண்டும் துவங்கியிருப்பது கண்டனத்திற்குரியது. கொரோனா நோய்த்தொற்று காலகட்டங்களில் இலங்கை கடற்படையின் அத்துமீறல் குறைந்திருந்த நிலையில், இனி அத்தகைய நிகழ்வுகள் நடைபெறாது என்ற நம்பிக்கை உருவாகியிருந்தது. ஆனால், அந்த நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் நாகை மாவட்ட மீனவர்கள் 23 பேரை, கடந்த 13ம் தேதி இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

இது நடந்து அடுத்த சில நாட்களில், புதுக்கோட்டை மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படை கப்பலை மோதவிட்டு தாக்குதல் நடத்தியிருக்கிறது. படகு கவிழ்ந்ததில் ராஜ்கிரண் என்கிற மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். அவருக்குத் திருமணமாகி 40 நாட்களே ஆகியுள்ளன என்பது துயரம். அவருடைய குடும்பத் துயரத்தில் மக்கள் நீதி மய்யமும் பங்குகொள்கிறது. இலங்கை கடற்படையின் இத்தகைய அத்துமீறல் நடவடிக்கைகள் மானுட உரிமைக்கே விரோதமானவை. உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு உரிய நிதியுதவியும் சேதமடைந்த படகுக்கு இழப்பீடும் ஆளும் அரசு வழங்கப்பட வேண்டும்.

`எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை, அப்பாவியாகக் கருதி அவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டும்’ என ஐ.நா கடல் சட்டம் சொல்கிறது. ஆனால், அது எப்போதும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. 1986க்குப் பிறகு இலங்கை கடற்படை நடத்திய தாக்குதல்களில், இதுவரை சுமார் 300 தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த உயிர்களுக்கு பதில் என்ன? இந்திய-இலங்கை கடல் எல்லையில் ரோந்துக் கப்பல் ஒன்றை நிறுத்த வேண்டும் என மீனவர்கள் வேண்டுகோள் விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தமிழக மீனவர்கள் மீதான அத்துமீறிய தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று, இலங்கை அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் தரவேண்டும். இப்பிரச்சனைக்குப் பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காண்பதற்கான ஏற்பாடுகளை, இருநாட்டு அரசுகளும் செய்ய வேண்டும். இருநாட்டுப் பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசி நிரந்தரமான தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதே இப்பிரச்சனையிலிருந்து தமிழக மீனவர்கள் மீள நல்வழி. இதற்கான முயற்சிகளை மத்திய அரசும் மாநில அரசும் ஒருங்கிணைந்து எடுக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது என மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளிட்டுள்ளது.