• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

தீரன் திரைப்பட பாணியில் கொள்ளையனை வேட்டையாடிய தனிப்படை..!

ByKalamegam Viswanathan

Jul 27, 2023

தீரன் சினிமா பட பாணியில், காவல்துறையின் தனிப்படை 13 ஆண்டுகளுக்கு பிறகு கொள்ளையனை குஜராத்தில் பிடித்த சம்பவம் அனைவராலும் பாராட்டப்படுகிறது.
நடிகர் கார்த்திக் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் திரைப்படம் வடமாநில கொள்ளை கும்பலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. குழந்தைகள், பெரியவர்கள் என, ஈவு, இரக்கமின்றி கொடூர தாக்குதல் நடத்தி கொள்ளையடிக்கும் கும்பலை தனிப்படை அமைத்து பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கைது செய்வது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றிருக்கும்.
அதேபோல், ஆடைகள் விற்பனை செய்வதுபோல் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிடும் கும்பல் அதிரடியாக நுழைந்து கொள்ளையை அரங்கேற்றுவதும் போன்றும் அதில் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
அப்படியொரு சம்பவம் உயிரிழப்பு இன்றி, மதுரையிலும் அரங்கேறியுள்ளது.
மதுரை அவனியாபுரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது மல்லிகை அப்பார்ட்மெண்ட் குடியிருப்பு. இந்த பகுதியில், உள்ள பூட்டிய வீட்டில் கடந்த 2010 ஆண்டு 33 பவுன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது. நகையை பறிகொடுத்தவர்கள் அவனியாபுரம் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கட்ட விசாரணை நடத்தினர்.
கொள்ளை சம்பவம் நடந்த விதத்தை கொண்டு தனிப்படையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், இதில் ஈடுபட்டது வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற துப்பு கிடைத்தது. அதன் அடிப்படையில், அடுத்தக்கட்ட விசாரணையை தனிப்படை போலீசார் தொடர்ந்தனர். கைரேகை உள்ளிட்ட கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்களை ஆதாரமாக கொண்டு குடும்பம், குழந்தைகள், உறவுகளை மறந்த தனிப்படை போலீசார் குஜராத் மாநிலத்தில் கூடாரம் போட்டு முகாமிட்டனர்.
இதற்கிடையே, அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகர் பகுதியில் உள்ள பழைய இரும்புக்கடையில் ரூ.2 ஆயிரம் திருடிய வழக்கில் நான்சிங் என்பவரை அவனியாபுரம் போலீசார் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்தன. அதாவது, கடந்த 2010-ல் மல்லிகை அப்பார்ட் மெண்ட் குடியிருப்பில் நான்சிங்கின் கூட்டாளியான குஜராத் மாநிலம் தாகூத் மாவட்டம், மோதிலட்சி கிராமத்தைச் சேர்ந்த சத்ரசிங் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், குஜராத்தில் முகாமிட்ட அவனியாபுரம் தனிப்படை போலீசார் சத்ரசிங்கை தேடிவந்தனர். இந்தநிலையில், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர் ஆணையின் பேரில் துணை கமிஷனர் மற்றும் உதவி கமிஷனர் செல்வக்குமார் ஆகியோர் மேற்பார்வையில், அவனியாபுரம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா, சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு தலைமையில் தனிப்படையினர் சத்ரசிங்கை அவரது இடத்திலேயே சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், சத்ரசிங், தனது கூட்டாளிகளுடன் தீரன் படத்தில் வருவதைப்போல தமிழ்நாடு வந்து பூட்டியுள்ள வீடுகளை நோட்டம் பார்த்து கொள்ளையடித்து விட்டு, நகைகளுடன் குஜராத் சென்று கூட்டாளிகளுடன் பிரித்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தது தெரிந்தது.
அதுமட்டுமின்றி, கைதான சத்ரசிங் மீது இந்தியாவின் பல மாநிலங்களிலும், தமிழ்நாட்டில் மதுரை, நெல்லை, கோவை, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது. அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் 2010-ம் ஆண்டு திருட்டு வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் சத்ரசிங்கை 13 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், இந்த கொள்ளை வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த அவனியாபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான தனிப்படையினருக்கு மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர் பாராட்டு தெரிவித்துள்ளார்.