• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மாரடைப்பால் உயிரிழந்த போதும் பயணிகள் உயிரை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்

ByKalamegam Viswanathan

Jun 3, 2023

அருப்புக்கோட்டை அருகே, அரசு பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழப்பு…வண்டியை சாலையோரமாக நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.
மதுரை, அயிராவதநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முருகேஸ்ராஜா (53). இவர் மதுரை சிப்காட் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கடந்த 12 வருடமாக ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று, மதுரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திலிருந்து, திருச்செந்தூருக்கு பயணிகளை ஏற்றிச் சென்றார். பேருந்தின் நடத்துநராக திருப்பதி இருந்தார். திருச்செந்தூரில் பயணிகளை இறக்கி விட்டுவிட்டு மீண்டும் திருச்செந்தூரில் இருந்து, 62 பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரையை நோக்கி பேருந்து வந்து கொண்டிருந்தது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பந்தல்குடி, சாய்பாபா கோவில் அருகே, தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் முருகேஸ்ராஜாவிற்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை உணர்ந்த அவர் பேருந்தின் வேகத்தை குறைத்து சாலையின் ஓரமாக மிதமான வேகத்தில் வண்டியை ஓட்டி வந்தார். திடீரென்று வண்டியின் வேகம் குறைந்ததையறிந்த நடத்துநர் திருப்பதி, வேகமாக ஓட்டுநரிடம் விபரம் கேட்பதற்காக வந்தார். அப்போது ஓட்டுநர் இருக்கையில் முருகேஸ்ராஜா சரிந்து விழும் நிலையில் இருந்ததையறிந்த நடத்துநர் திருப்பதி, உடனடியாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தினர். உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனம் வருவதற்குள், ஓட்டுநர் முருகேஸ்ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக அவரது உடல் மீட்கப்பட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பேருந்தில் இருந்த பயணிகளுக்கு மாற்று வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறிந்து பந்தல்குடி காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனது உயிர் போகும் நிலையிலும், பேருந்தில் இருந்த பயணிகளின் உயிரை காப்பாற்றும் வகையில் செயல்பட்டு உயிரிழந்த ஓட்டுநரின் செயல், பயணிகளிடம் கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது