• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை…

சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக வரும் 21ஆம் தேதி வரை பக்தர்கள் வரத் தடை- தேவசம் போர்டு அறிவிப்பு.

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மலையாள மாதத்தின் துலா மாதம் மற்றும் தமிழ் மாதத்தின் ஐப்பசி மாத பூஜைகளுக்காக கோவில் நடை கடந்த 16ம் தேதி திறக்கப்பட்டது.

இதற்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு 17ஆம் தேதி காலை முதல் 21ம் தேதி மாலை வரை அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கேரளாவில் கடந்த 2 தினங்களாக கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சபரிமலையில் உள்ள பம்பா நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பக்தர்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 18ஆம் தேதி வரை சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று நேற்று முன்தினம் தேவசம்போர்டு அறிவித்திருந்த நிலையில் இன்று காலையில் 21ம் தேதி வரை அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளது.

21ம் தேதி மாலை ஐப்பசி மாத பூஜைகளுக்காக நடை சாத்தப்படும் நிலையில் 21ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்திருப்பது ஐப்பசிமாத பூஜைகளுக்கு பக்தர்களுக்கு முற்றிலும் அனுமதி இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.இதனால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து ஐயப்பனை தரிசிக்கக் காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேலும் இந்த ஆண்டு கார்த்திகை மாதம் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 15ஆம் தேதி சபரிமலை நடை மீண்டும் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.