• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கேரளாவில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு…

Byமதி

Oct 17, 2021

கேரளாவின் தென்கிழக்கு அரபி கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளா முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

நேற்று கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. பலத்த மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டது. கூட்டுக்கல், பெருவந்தனம் கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தது, வீட்டில் இருந்தவர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். இதை அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்துச் சென்று அவர்களை மீட்டனர்.

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி உடனடியாக நடந்தாலும் இன்னும் 22 பேரை காணவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தொடுபுழா அருகே அரக்குளம் ஆற்றுப்பாலத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கிய கார், அடித்துச் செல்லப்பட்டது. அதேபோல் கோட்டயம் மற்றும் இடுக்கியில் மழைக்கு 2 பெண்களும், ஒரு குழந்தையும் இறந்தனர். பத்தனம்திட்டா பகுதியிலும் மழைக்கு 2 பேர் பலியானார்கள். இவர்களையும் சேர்த்து மழைக்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

மேலும் ராணுவ ஹெலிக்காப்டர்களும் மோசமான வானிலை காரணமாக அந்த பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இன்று காலையில் மழை சற்று குறைந்ததும் பேரிடர் மீட்பு குழுவினர் அங்குச் சென்று நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்டு வருகிறார்கள்.

கேரளாவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதையடுத்து கோட்டயம், பத்தனம்திட்டா, திருச்சூர், இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்த பெய்த மழை, கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டு ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தை நினைவு படுத்தியதாக கேரள மக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.