• Mon. Apr 29th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Apr 6, 2023

சிந்தனைத்துளிகள்

வெற்றி நிச்சயம்

சான்ஸ_ என்றொரு ஜென் குரு இருந்தார். மிகச் சிறந்த வாள் வீரர். அவரிடம் ஒரு புதிய சீடன் சேர்ந்தான். “இந்த நாட்டிலேயே முதன்மையான வாள் வீரனாக என்னை ஆக்க முடியுமா?” என்றான்.”அதற்கென்ன… பத்து வருடங்களில் உன்னை அப்படித் தயார் செய்து விடுகிறேன்” என்றார் குரு.
‘என்னது, பத்து வருடங்களா? ஐந்தே வருடங்களில் சாதிக்க வேண்டும் குருவே. மற்றவர்களை விட இரண்டு பங்கு அதிகமாக உழைக்கத் தயாராக இருக்கிறேன்’.”அப்படியானால் இருபது வருடங்களாகும்” என்றார் சான்ஸ. சீடன் திகைத்தான்.’போதாது என்றால், இன்னும் நான்கு பங்கு கடுமையாக உழைக்கிறேன்’ என்றான். ”அப்படிச் செய்தால், நாற்பது வருடங்களாகுமே” என்றார் குரு. ஆம், உங்களை வருத்திக் கொண்டு நீங்கள் நினைத்ததை அடைவதற்கு அதிக காலமாகும். இதைத்தான் சான்ஸ அந்தச் சீடனுக்குப் புரியவைத்தார். கடுமையாக உழைப்பவர்கள் சில சமயம் வெற்றி பெறலாம். ஆனால், அதன் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாது.
உலகின் மிக அற்புதமான கண்டு பிடிப்புகள், விஞ்ஞானிகள் ஓய்வாக இருந்தபோதுதான் நிகழ்ந்திருக்கின்றன. மரத்தடியில் சும்மா உட்கார்ந்திருந்த போதுதான் அப்பிள் விழுவதைக் கவனித்த நியூட்டன் புவியீர்ப்பு பற்றிய விதியைக் கண்டுபிடித்தார். ’பாத் டப்’பில் ஓய்வாகக் குளித்துக் கொண்டிருந்த போதுதான், மிதப்பது பற்றிய விதிகளைக் கண்டுணர்ந்தார் ஆர்க்கிமிடீஸ்.
டென்ஷனில்லாமல், ரசித்து முழு ஈடுபாட்டுடன் பணிகளைச் செய்யும்போதுதான், மூளை அதன் உச்சத் திறனுடன் செயலாற்றும். கவனித்துப் பாருங்கள். விளையாட்டில் கூட, வெற்றியை நினைத்து அதிக படபடப்புடன் விளையாடும் குழுதான் பெரும்பாலும் தோற்கிறது. விளையாட்டை அனுபவித்து ஆடுபவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

வெற்றி வெற்றி என்று உங்களை நீங்களே வருத்திக் கொள்ளும் சந்தர்ப்பங்களில் உடலளவிலும் மனதளவிலும் நீங்கள் பலவீனமாகிப் போவீர்கள்.வெற்றியைப் பற்றிய அச்சத்தை விட்டுவிட்டு,மனதை அமைதியாக வைத்திருங்கள். உடல் தானாக வேகமாக உழைக்கும். ஆனால், உங்களில் பெரும்பாலானவர்கள் நேரெதிராக அல்லவா இருக்கிறீர்கள்? உங்கள் மனம் நிலையில்லாமல் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனால், உடலில் வேகம் குறைந்துவிடுகிறது.

சுருக்கமாக சொன்னால் மனதை இலகுவாகவும் மகிழ்ச்சியுடனும் நன்றியுணர்வுடனும் வைத்திருங்கள்.உங்களை காதலியுங்கள்.உங்கள் மனதை காதலியுங்கள்.வெற்றி நிச்சயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *