• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

Byவிஷா

Mar 9, 2023

நற்றிணைப் பாடல் 132:

பேர் ஊர் துஞ்சும் யாரும் இல்லை
திருந்து வாய்ச் சுறவம் நீர் கான்று ஒய்யெனப்
பெருந் தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி
போர் அமை கதவப் புரை தொறும் தூவ
கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல் நகர்ப்
பயில்படை நிவந்த பல் பூஞ் சேக்கை
அயலும் மாண் சிறையதுவே அதன்தலை
காப்புடை வாயில் போற்று ஓ என்னும்
யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி
ஒன்று எறி பாணியின் இரட்டும்
இன்றுகொல் அளியேன் பொன்றும் நாளே

பாடியவர்: ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
திணை: நெய்தல்

பாடலின் பொருள்:

எனக்கு அழிவு வரும் நாள் இன்றுதானோ என்று சொல்லிக்கொண்டு தலைவி கலங்குகிறாள்.
ஊரே உறங்குகிறது. எனக்குத் துணையாக யாருமே இல்லை. சுறா மீன் வாயைப் பிளந்துகொண்டு நீரில் தோன்றுகிறது. காற்றும் மழையும் தெருவெல்லாம் கொட்டுகின்றன. மூடியிருக்கும் வீட்டுக் கதவையே தாக்கிக்கொண்டு மழை பொழிகிறது. கூர்மையான பல்லை உடையது அன்னப்பறவை. அது நடுங்கும்போது அதன் தூவிகள் உதிரும். அப்படி உதிர்ந்த தூவியைத் திணித்துச் செய்யப்பட்ட மெத்தை. அந்த மெத்தையின் மேல் நான் வீட்டுக் காவல் சிறையில் கிடக்கிறேன்.

அத்துடன் அரண்மனைக் காவலாளி வாயிலில் இருந்துகொண்டு அவ்வப்போது ஓ என்று கூச்சலிடுகிறான். நடு சாம நேரம் இது, என அறிவிக்கும் மணியொலி கேட்கிறது. இந்த ஒலி என் உயிருக்கு இன்றே கடைசி நாள் என்று ஒலிக்கிறது போலும்.