• Sun. Dec 14th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நேரு நினைவுக் கல்லூரியில் நிலா திருவிழா தொடக்கம்

ByKalamegam Viswanathan

Feb 26, 2023

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு NMC ஆஸ்ட்ரோ கிளப் மற்றும் இயற்பியல் துறை சார்பில் நிலா திருவிழா தொடங்கப்பட்டது.
தேசிய அறிவியல் நாள் (National Science Day) பிப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.


இயற்பியல் துறை உதவி பேராசிரியர் கபிலன் வரவேற்புரை ஆற்றி, நமது தொலைநோக்கி பற்றி எடுத்துரைத்தார். இந்த நிலா திருவிழா நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.ஆர் பொன்பெரியசாமி தொடங்கி வைத்து, விண்வெளி பற்றிய பல அதிசய நிகழ்வுகளை இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு அதை தொலைநோக்கிய வழியாக கண்டு களித்து அறிவியல் வளர்ச்சியை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். இயற்பியல் துறை உதவி பேராசிரியர் ரமேஷ் பேசுகையில் நிலவின் இயக்கம் வைத்து தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகிறது என்றும், ஒவ்வொரு நாளும் நிலவானது 12 டிகிரி நகர்வதை வைத்து திதி கணக்கிடுகிறார்கள் என்றும், ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் நிலவு பயணம் செய்யும் போது அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தின் பெயர் தமிழ் மாதமாக குறிக்கப்படுகிறது என்பதையும், நிலவின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.
புத்தனாம்பட்டி சமூக ஆர்வலரான பேராசிரியர் முனைவர் சரவணன் நடேசன் அவர்கள் பேசுகையில் 60 தமிழ் வருடங்கள் கணக்கிடுவது பற்றியும், அனைவரும் அவர்கள் பிறந்த தமிழ் வருடத்தின் பெயரை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்த புத்தனாம்பட்டி கிராமத்திற்கு நவீன தொலைநோக்கி அனைவரும் பயன்படுத்தி அறிவியலை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறினார். நேரு நினைவுக் கல்லூரியின் முன்னாள் மாணவர் கோவிந்தராஜ் கலந்து கொண்டுபேசுகையில் வியாழன் வெள்ளி, செவ்வாய், சனி புதன் மற்றும் நட்சத்திரங்கள் பற்றி எடுத்து கூறினார்.
இந்த நிகழ்வில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு அதிநவீன தொலைநோக்கி மூலம் அழகிய நிலா, வியாழன் கோள் மற்றும் வியாழனின் நான்கு நிலாக்கள், வெள்ளிகோள், செவ்வாய் கோள், ஆகியவை நேரடியாக காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வு மேலும் பிப்ரவரி 26, 27, 28 மூன்று நாட்கள் நடைபெறுகிறது. அந்த மூன்று நாட்களிலும் மாலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரை தொலைநோக்கி மூலம் நேரடியாக காணலாம்.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார், இந்திய வான் இயற்பியல் மையம், இந்திய வானியல் சங்கம், தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் சங்கம், அறிவியல் பலகை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் மற்றும் எய்டு இந்தியா ஆகியவை இணைந்து தமிழகம் முழுவதும் 200 இடங்களில் இந்த நிலா திருவிழாவை நடத்துகிறது.