• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை…
டிடிவி தினகரன் அறிவிப்பு _

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது.இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு களத்தில் பரப்புரை பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஒதுக்கப்பட்ட பிரஷர் குக்கர் சின்னத்தை, இடைத்தேர்தல் காலங்களில் ஒதுக்கிட இயலாது என தலைமை தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது. பாராளுமன்ற பொதுத்தேர்தல் ஓராண்டு காலத்திற்குள் வரவிருக்கும் சூழலில், புதியதோர் சின்னத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும். ஆகவே வரவிருக்கிற பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் குக்கர் சின்னத்தோடு தேர்தல்களை சந்திப்போம். இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தவிர்ப்பதே சரியாக இருக்கும் என்ற தலைமைக்கழக நிர்வாகிகளின் ஆலோசனையை கருத்தில் கொண்டு, இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு டிடிவி தினகரன் கூறி உள்ளார்.மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவின் ஆதரவு யாருக்கு? என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.