• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

Byவிஷா

Jan 27, 2023

நற்றிணைப் பாடல் 102:

கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப் பைங் கிளி
அஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டு
நின் குறை முடித்த பின்றை என் குறை
செய்தல் வேண்டுமால் கை தொழுது இரப்பல்
பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டு
நின் கிளை மருங்கின் சேறிஆயின்
அம் மலை கிழவோற்கு உரைமதி இம் மலைக்
கானக் குறவர் மட மகள்
ஏனல் காவல் ஆயினள் எனவே

பாடியவர்: செம்பியனார்
திணை: குறிஞ்சி

பொருள்:
தலைவன் மீது கொண்டுள்ள காதல் மிகுதியால் தலைவி தான் காவல் காக்கும் வயலில் மேயும் கிளியிடம் பேசுகிறாள்.
வளைந்த தினைக் கதிர்கள் குறையும்படிச் சிவந்த வாயால் கிள்ளிச் செல்லும் கிளிகளே! அச்சம் கொள்ளாமல் வயிறார உண்ணுங்கள். கிள்ளிச் சென்று உங்கள் குறைகளைத் தீர்த்துக்கொள்ளுங்கள். அதன் பின்னர் என்னுடைய குறையையும் தீர்த்து வையுங்கள். என் கைகளால் தொழுது உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். பலவாகப் பழுத்துக் கிடக்கும் பலா மரங்களை உடைய மலைச் சாரலில் வாழும் உங்களது உறவினர்களிடம் செல்வீர்கள் ஆயின், அந்த மலைக்கு உரியவனான என் உரிமையாளனுக்குச் சொல்லுங்கள். இந்த மலையில் கானக் குறவரின் மடப்பெண் தினைக்காவல் புரிந்துகொண்டு தனியே இருக்கிறாள் என்று சொல்லுங்கள்.