• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Dec 29, 2022

நற்றிணைப் பாடல் 87:

உள் ஊர் மாஅத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல் அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்,
வெல் போர்ச் சோழர் அழிசி அம் பெருங் காட்டு
நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு,
அது கழிந்தன்றே தோழி! அவர் நாட்டுப்
பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்,
பெருந் தண் கானலும், நினைந்த அப் பகலே.

பாடியவர்: நக்கண்ணையார்
திணை: நெய்தல்

பொருள்:

தலைவனைப் பிரிந்து ஏங்கும் தலைவி தன் தோழியிடம் சொல்கிறாள். 
ஊருக்குள்ளே மாமரம். அந்த மரத்தில் வெளவால். அதற்கு முள்ளுப் போல் பற்கள். அது மாமரக் கிளையில் தொங்கிக்கொண்டு தூங்கும்போது கனவு காண்கிறது. அழிசி ஒரு சோழ மன்னன். அவன் நாட்டுப் பெருங்காட்டில் இருந்த நெல்லிக்கனியை உண்பது போல அதற்குக் கனவு. இது அவர் (தலைவன்) நாடு. அன்று அவரோடு இருந்த கானல் பரப்பையும், பகல் காலத்தையும் நினைக்கும்போது அந்த வெளவால் கனவு காண்பது போல் இருக்கிறது. அந்தக் கானலில் புன்னை மரங்கள். அதன் அரும்புகள் பனித்துளி போல் உதிர்கின்றன. அங்குள்ள துறையில் மேயும் இப்பிப் பூச்சிகளின் (கிளிஞ்சில்) மேல் அவை உதிர்கின்றன. அதனைச் சிறுகுடியில் வாழும் பரதவ மக்கள் மகிழ்ச்சியோடு கண்டு திளைக்கின்றனர். இதுதான் அந்தக் கானல். அன்று நானும் அவரும். இன்று பரதவ மக்கள். – தலைவியின் இரங்கல், ஏக்கம்.