• Thu. May 2nd, 2024

ஆதாரை இணைக்காத பான் கார்டு செல்லாது…அதிரடி அறிவிப்பு

ByA.Tamilselvan

Dec 25, 2022

ஆதார் இணைக்காத ‘பான் கார்டு’ செல்லாது என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வருமான வரி செலுத்துவதற்கான நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாரை இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி வருமான வரி செலுத்துவோர் தங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்து வருகின்றனர். இதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை நிர்ணயித்து இருக்கிறது. அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்து உள்ளது.
ஆதார் இணைக்காத பான் கார்டுகள் 1.4.2023 முதல் செயலற்றதாகி விடும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஒருவரின் பான் கார்டு செயலற்றதாகி விட்டால், வருமான வரிச்சட்டத்தின் அனைத்து விளைவுகளுக்கும் அந்த தனிநபர் பொறுப்பாவதுடன், பல சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தது.
அந்தவகையில், செயல்படாத பான் எண்ணைப் பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்ய முடியாது; நிலுவையில் உள்ள வருமானம் செயலாக்கப்படாது; நிலுவையில் உள்ள பணத்தைத் திரும்பப் பெற முடியாது; குறைபாடுள்ள வருமானம் தொடர்பான நிலுவையில் உள்ள நடைமுறைகளை முடிக்க முடியாது மற்றும் அதிக விகிதத்தில் வரி கழிக்கப்பட வேண்டும், பல்வேறு தளங்களிலும் வரி செலுத்துவோர் சிரமத்தை சந்திக்க நேரிடும் என்றும் வருமான வரித்துறை கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *