• Wed. May 1st, 2024

இலங்கையில் மாண்டஸ் புயல் எதிரொலி: பள்ளி கூடங்கள் மூடப்பட்டன; மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் மாண்டஸ் புயல் எதிரொலியாக பள்ளி கூடங்கள் மூடப்பட்டதுடன், பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
வங்க கடலில் கடந்த 5-ந்தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், நேற்று முன்தினம் அதிகாலையில் புயலாகவும் வலுவடைந்தது. இதற்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையில் முதல் புயல் இதுவாகும். நேற்று முன்தினம் புயலாக வலுப்பெற்ற நிலையில், இரவில் தீவிர புயலாகவும் மாறி மிரட்டியது. தொடர்ந்து வங்க கடல் பகுதியில் நேற்று காலை வரை நிலைக்கொண்டு இருந்தது. நேற்று காலை தீவிர புயல், மீண்டும் புயலாக வலுவிழந்து தமிழக வட கடலோர பகுதியை நோக்கி வந்தது. புயல் கரையை கடந்த நிலையில் 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இலங்கையில் மாண்டஸ் புயல் எதிரொலியாக, கொழும்பு மற்றும் பல நகரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனை தொடர்ந்து, தீவிர காற்று மாசுபாடு ஏற்பட்டு உள்ளது. இதனால், இலங்கையில் உள்ள பள்ளி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் வீட்டிலேயே இருக்கும்படியும், வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். புயலை முன்னிட்டு இலங்கையின் அனுராதபுரம், திரிகோணமலை, பொலன்னருவை, புட்டலம் மற்றும் மகா இல்லுபள்ளம்மா ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *