• Fri. Apr 26th, 2024

மொத்த இறப்பு எண்ணிக்கையில் 94% பேர் தடுப்பூசி போடாதவர்கள்- மும்பை மாநகராட்சி

கொரோனா தொற்றால் கடந்த 11 மாதங்களில் மும்பை மாநகராட்சியில் இறந்த 4575 நபர்களில் 6% அல்லது 255 பேர் கொரோனா தொற்றுக்கு எதிராக குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திக் கொண்டவர்கள் என்று மும்பை மாநகராட்சி தரவுகள் கூறுகின்றன. ஜனவரி 16ம் தேதி, 2021 முதல் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியது. 2021ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி முதல் 2022 ஜனவரி 4 வரை கொரோனா தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 4575 ஆக மும்பையில் பதிவாகியுள்ளது. பலியானவர்களில் 4320 நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள். அதாவது கடந்த 11 மாதங்களில் கொரோனா தொற்றால் பலியானவர்களில் 94% பேர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள்.


இறந்தவர்களில் 255 பேர் அதாவது 6% நபர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட போதும் தொற்றின் தாக்கத்தால் இறந்துள்ளனர். இவ்வகை இறப்புகள் ப்ரேக்த்ரோ (Breakthrough) தொற்றாக வரையறுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மத்தியில் இறப்பு விகிதம் 10%க்கும் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


கொரோனா தொற்றால் மும்பையில் உயிரிழந்த நபர்களில் 94% நபர்கள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள். கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் 100% பாதுகாப்பினை வழங்காது என்ற போதிலும் மக்கள் மத்தியில் ஏற்படும் தீவிரத்தை தடுப்பூசிகள் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே இறப்பு விகிதமும் குறைகிறது என்று மும்பை மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் சுரேஷ் ககனி குறிப்பிட்டார். அந்தேரி பகுதியின் கிழக்கை உள்ளடக்கிய கே-கிழக்கில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 400 ஆகும். இது மும்பையில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச கொரோனா உயிரிழப்பாகும். அதனை தொடர்ந்து தாஹிசாரை உள்ளடக்கிய ஆர் – தெற்கு மற்றும் மாலாட் மேற்கை உள்ளடக்கிய பி – வடக்கு ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்றால் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.


தடுப்பூசி செலுத்தியும் உயிரிழந்த நபர்களில் நீரிழிவு மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட இணை நோய்கள் இருந்தது. அது அவர்களின் நிலையை மேலும் கவலைக்கிடமாக்கியது என்று மும்பை மாநகராட்சி தரவுகள் குறிப்பிட்டுள்ளது. இந்த நோயாளிகளுக்கு ஏற்கனவே கடுமையான இணை நோய்கள் இருந்ததால் கொரோனா தொற்று இறப்புக்கு இரண்டாவது காரணியாக அமைந்தது. தடுப்பூசி போட்ட பிறகும், நோயெதிர்ப்பு குறைபாடுள்ள மற்றும் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்பட்ட மறுதொற்றினை மரணத்துடன் இணைக்க இயலாது என்று மருத்துவர் அவினாஷ் சூப் தெரிவித்தார்.


2021ம் ஆண்டு ஜூன் மாதம் கொரோனா தொற்று அபாயத்தில் இருந்த தமிழகத்தை சேர்ந்த 1.2 லட்சம் காவல்துறையினர் மத்தியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வுகளில் இரண்டு டோஸ்கள் செலுத்திக் கொள்ளப்பட்டதால் இரண்டாம் அலையின் போது 95% மரணங்களை தடுப்பதில் வெற்றி கிடைத்தது என்று கூறப்பட்டது. அதேசமயம் ஒரு டோஸ் மூலம் தடுப்பூசி போடப்பட்டவர்களில் 82% மரணங்கள் தடுக்கப்பட்டன.
அதிக அளவு பரவும் தன்மை கொண்டுள்ள ஒமிக்ரான் தற்போது புதிய அச்சுறுத்தலாக பரவி வருகின்ற நிலையில் ஒரே ஒரு டோஸை மட்டும் செலுத்திக் கொண்ட, இணை நோய்களை கொண்டிருக்கும் நபர்கள் விரைவில் இரண்டாவது டோஸை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.


மும்பையில் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் தங்களின் இரண்டாம் டோஸ்களை தாமதமாக பெற்றுள்ளனர். தற்போது மருத்துவ ஆக்ஸிஜனை பெற்று வரும் நோயாளிகளில் 96% பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தான். இரண்டாவது டோஸ் செலுத்தாதவர்கள் செலுத்திக் கொள்வதோடு தகுதி உடைய நபர்கள் தங்களின் பூஸ்டர் டோஸ்களையும் செலுத்திக் கொள்வது நல்லது என்று மருத்துவர் சூப் தெரிவித்துள்ளார். ஜனவரி 11ம் தேதி வரை மும்பையில் 1.91 கோடி நபர்கள் தங்களின் முதல் டோஸை பெற்றுள்ளனர். 85 லட்சம் பேர் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர். 25,242 நபர்கள் பூஸ்டர் டோஸ்களை பெற்றவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *