ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொன்னை அணைக்கட்டு பகுதிக்கு வினாடிக்கு 65 ஆயிரத்துக்கும் அதிகமான தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதுமட்டுமின்றி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று காலை முதல் தற்போது வரை பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாலாற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாலாற்றில் திறந்து விடப்பட்டுள்ள 84,000 கன அடி தண்ணீர் தற்போது வாலாஜா தடுப்பணைக்கு வந்து கொண்டிருக்கிறது. தடுப்பணை நிரம்பி வழிவதால் அங்கு பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கரையோரங்களில் வசிக்கும் கிராம மக்களை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள முகாம்களுக்கு வருவாய்த் துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கொட்டும் நள்ளிரவில் மழைக்கு இடையில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.