• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

64 வயது பெண்மணிஉடல் உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தானம்..,

ByKalamegam Viswanathan

Dec 17, 2025

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 64 வயது பெண்மணி விபத்தில் தலைக்காயம் அடைந்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூளைச் சாவடைந்தார். அவரது உடல் உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தானமாக உறவினர்களால் வழங்கப்பட்டன.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள நந்தவனப்பட்டியை சேர்ந்தவர் தேவ மனோகரி (64 வயது). இவர் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி அன்று இரவு சாத்தூரில் உள்ள முத்தூட் பேங்க் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் ஒன்று மோதியதில், கீழே விழுந்த அவருக்கு பலத்த தலைக்காயம் ஏற்பட்டது.

சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அவசர விபத்து சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு டிசம்பர் 14ஆம் தேதி மாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள தலைக்காய சிகிச்சை பிரிவில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் மூளைச்சாவடைந்தார்.‌

இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் கூறுகையில், மூளைச்சாவடைந்த தேவ மனோகரியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன்வந்த நிலையில் அவரது கணவர் ஆவுடையப்பனிடம் ஒப்புதல் பெறப்பட்டது. கல்லீரல் திருச்சியில் உள்ள அப்பலோ சிறப்பு மருத்துவமனைக்கும், திருச்சி டாக்டர் முருகன் ஹெல்த் கேர் மருத்துவமனை, திருச்சி காவேரி மருத்துவமனை ஆகியவற்றிற்கு தலா ஒரு சிறுநீரகம் வழங்கப்பட்டன. கருவிழிகள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும் தானமாக பெறப்பட்டுள்ளன.

தீவிர விபத்து சிகிச்சைப் பிரிவில் உடற்கூராய்வு செய்யப்பட்டு உரிய மரியாதையுடன் அவரது குடும்பத்தாரிடம் காவல்துறையின் மூலம் உடல் ஒப்படைக்கப்பட்டது. மேற்கண்ட நோயாளியின் உறவினர்கள் மற்றும் காவல் துறைக்கு அரசு இராசாசி மருத்துவமனை சார்பாக எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேற்கண்ட நபரின் உடல் உறுப்பு தானத்தால் நான்கு நபர்கள் பயன் பெற்றுள்ளனர். உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு தமிழக அரசு சார்பாக இறுதி மரியாதை செய்வதற்காக விருதுநகர் மாவட்ட நிர்வாகத்திடம் அவரது உடல் உரிய மரியாதையுடன் அனுப்பி வைக்கப்பட்டது என்றார்.