• Tue. Dec 10th, 2024

சாலை விபத்தில் உதவி செய்பவர்களுக்கு 5000 ரூபாய் பரிசு

Byமதி

Nov 27, 2021

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை உரிய நேரத்தில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரியும் நபர்களை ஊக்குவிக்கும் பொருட்டு 5000 ரூபாய் பரிசு வழங்கும் திட்டத்தை இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்தது. இந்த திட்டத்தை தமிழக போக்குவரத்து துறை செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொன்னான நேரத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரியும் நபர்களுக்கு ரூ.5000/- பரிசாக வழங்கப்படும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவசரகால உதவியினை பொதுமக்கள் செய்யவேண்டும் என்பது ஆகும். ஒரு ஆண்டில் அதிகபட்சம் 5 முறை ஒரு நபருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்.

சாலை விபத்து நடந்த பின் காவல்துறையினர் அவ்விடத்தை பார்வையிட்டு விபத்தின் தன்மை குறித்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவிப்பர். அனைத்து விபத்துக்களையும் மாவட்ட ஆட்சியரது தலைமையின் கீழ் இயங்கும் ‘மாவட்ட அளவிலான மதிப்பீட்டு குழு’ ஆய்வு செய்யும். இதில் தெரிவு செய்யப்படும் நேர்வுகள் ரூ.5000 பரிசுத் தொகை வழங்குவதற்காக போக்குவரத்து துறை ஆணையருக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் கூறியுள்ளது.