கேரள மாநிலம் பாலக்காடு மலம்புழா சேறாடு பகுதியைச் சேர்ந்தவர் பாபு. பாபுவும், அவருடன் இரண்டு நண்பர்களும் சேறாடு பகுதியில் உள்ள குரும்பச்சி மலையில் ஏறுவதற்காக திங்கள்கிழமை மதியம் சென்றுள்ளனர். திங்கள் அன்று மாலையில் சேறாடு செங்குத்து மலையில் மூன்றுபேரும் ஏறியுள்ளனர். பாபுவுடன் சென்ற இரண்டுபேரும் பாதியில் மலையில் இருந்து இறங்கிவிட்டனர். ஆனால் பாபு தொடர்ந்து மலை ஏறியுள்ளார்.
இந்த நிலையில் சுமார் 1,200 மீட்டர் உயரம் உள்ள அந்த செங்குத்து மலையில் சுமார் 700 மீட்டர் உயரத்துக்குச் சென்றபோது திடீரென கால் இடறி குகை போன்ற ஒரு பள்ளாத்தில் விழுந்தார் பாபு. இதில் பாபுவுக்கு இடது காலில் பலமாக அடிபட்டுள்ளது. இதையடுத்து பாபு அந்த குகை போன்ற பகுதியில் அமர்ந்து கொண்டார். இதுபற்றிய தகவலின்பேரில் தீயணைப்புத்துறை, துணை ராணுவம் உள்ளிட்டவை குரும்பச்சி மலையில் மீட்புப்பணிக்காக சென்றனர். தரையில் இருந்து முக்கால் கிலோ மீட்டர் உயரத்திலும், மலை உச்சியில் இருந்து அரை கிலோ மீட்டர் கீழ் பகுதியிலும் பாபு சிக்கியுள்ளார்.
செங்குத்து மலை என்பதால அவரை உடனடியாக மீட்கமுடியாத நிலை ஏற்பட்டது. திங்கள்கிழமை இரவு நேரம் ஆகிவிட்டதால் மீட்பு பபி தொய்வடைந்தது. நேற்று பகல் நேரத்தில் ட்ரோன் உதவியுடன் ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்துச் சென்று பாபுவுக்கு கொடுக்கும் முயற்சியில் மீட்புப்படையினர் முயன்றனர். ஆனால் ட்ரோன் மலையில் உரசி கீழே விழுந்தது. பாபுவை மீட்க கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவின்பேரில் கலெக்டர், எஸ்.பி மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளும் குரும்பச்சி மலை அடிவாரத்தில் முகாமிட்டனர்.
நேற்று இரவு மீட்புக்குழுவினர் மூன்று பிரிவாக பிரிந்து செயல்பட்டனர். ஒரு குழுவினர் மலை உச்சிக்குச் சென்று அங்கிருந்து கீழே இறங்கி வந்தனர். மற்ற இரண்டு குழுவினரும் இரண்டு பக்கமாக கீழ் பகுதியில் இருந்து மலை ஏறினர். முதலில் தண்ணீரும், உணவும் பாபுவுக்கு வழங்க மீட்புக்குழுவினர் நடவடிக்கை எடுத்தனர். மீட்புக்குழு பாபு இருக்கும் இடத்துக்கு 200 மீட்டர் அருகே சென்றுவிட்டதாகவும். மீட்புக்குழுவினர் குரல் கொடுத்தபோது பதிலுக்கு பாபு குரல் கொடுத்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் சுமார் 43 மணி நேரத்துக்குப்பின் ராணுவத்துடன் உதவியுடன் கயறு மூலம் இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார்.