• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

40 ஆண்டுகள் கடந்தும் மனதில் நீங்கா இடம்பெற்ற ‘மூன்றாம்பிறை’!

தமிழ்திரையுலகில் பல சிறப்புகளைப் பெற்ற படம் மூன்றாம் பிறை.. கமல், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.. கண்ணதாசனின் கடைசி கவித்துவமான வரிகளால் எழுதப்பட்ட பாடல் வெளியான படம், கமலுக்கும், பாலுமகேந்திராவுக்கும் விருது பெற்றுத்தந்த படம் என பல சிறப்புகளைக் கொண்ட படம் மூன்றாம் பிறை வெளியாகி 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

சினிமாவில் கவித்துவத்தை, கலையை விரும்பியவர்களுக்கு பாலுமகேந்திரா பெயர் போனவர். தேசியவிருதுகளின் நாயகன் பாலுமகேந்திரா எடுத்தபடம் மூன்றாம் பிறை அதில் கமல்-ஸ்ரீதேவி ஜோடி வழக்கமான காதல், இளமையைத்தாண்டி வேறுகோணத்தில் நடித்தனர். இளையராஜா உச்சத்தில் இருந்த நேரம், பல பாடல்களை பல கவிஞர்கள் எழுதினாலும் கண்ணதாசனின் வைர வரிகளுக்கு எப்போதும் மவுசு உண்டு.
அப்படி எழுதிய பாடல்தான்
“கண்ணே கலைமானே!
கன்னி மயிலென கண்டே உனை நானே’ பாடல்.

அதை அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்லும்முன் எழுதிக்கொடுத்துவிட்டு இதுதான் கடைசி பாடல்னு நினைக்கிறேன் என்று கூறிச் சென்ற கவிஞர் அதன்பின் உயிரற்ற உடலாகத்தான் கொண்டுவரப்பட்டார். அதனால் அப்பாடல் எப்போதும் சிறப்புப்பெற்ற பாடலாக விளங்கியது. இதை அடிக்கடி இளையராஜாவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பள்ளியின் டீச்சராக அப்பாவி இளைஞராக வரும் கமலிடம் விபத்தில் சிக்கி தான் யார் என்பதை மறந்துப்போன குழந்தையாக பாதுகாப்பு தேடிவரும் ஸ்ரீதேவிக்கு அடைக்கலம் கொடுக்கும் கமல். ஒருகட்டத்தில் ஸ்ரீதேவி மீது அபரிதமான அன்பும், காதலும் கொள்கிறார். ஸ்ரீதேவி நலமடைந்த பின்னர், அவருக்கு கமல் யார் என்பது மறந்துப்போக ஊருக்கு புறப்படும் ஸ்ரீதேவியிடம் கமல் தான் யார் என்பதை ஞாபகப்படுத்த எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிய விபத்தில் சிக்குகிறார் என்பதாக கதை முடியும். யதார்த்தம் இல்லை என்றாலும் அந்த கடைசி காட்சி , அதில் கமலின் நடிப்பு இன்றளவும் பேசப்படுகிறது.

இந்தப்படத்துக்காக ஸ்ரீதேவி, கமல் இருவருக்கும் தேசிய விருது கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, சுப்பிரமணி என நாயை குழந்தைத்தனமாக கொஞ்சும் ஸ்ரீதேவி, காதல், தந்தையின் அன்பு என சகலத்தையும் கலந்து ஸ்ரீதேவியின்மீது பொழியும் வேடத்தில் நடித்த கமல், இயற்கையை அள்ளிக் கொடுத்த பாலுமகேந்திராவின் கேமரா என பலதும் பாராட்டப்பட்டாலும் கமலுக்கும், பாலு மகேந்திராவுக்கும் விருது கிடைத்தது.

இப்படம் இந்தியில் சாத்மா என எடுக்கப்பட்டது, அதன் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்த ஸ்ரீதேவியை பாலிவுட் வாரி அணைத்துக்கொண்டது. பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவராக மாறிய ஸ்ரீதேவி போனிகபூரை மணந்து அங்கேயே செட்டில் ஆனார்.

கண்ணே கலைமானே, பூங்காற்று புதிரானது, பொன்மேனி உருகுதே, நரிகதை பாடல் அனைத்தும் சிறப்பாக ரசிக்கப்பட்டது. 40 ஆண்டுகள் கடந்தும் கண்ணே கலைமானே எங்கோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டுத்தான் இருக்கிறது. அந்த வகையில் மூன்றாம் பிறை எப்போது ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒரு படம் தான்.