திண்டுக்கல் பழனி பைபாஸ் அருகே ராமையன்பட்டி தரைப்பாலத்தின் அருகே கயிற்றால் கட்டப்பட்ட அட்டைப்பெட்டியில் கை, கால்கள் நைலான் கயிறால் கட்டப்பட்ட நிலையில் ரத்த காயங்களுடன் ஆண் சடலம் இருந்தது. தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்தனர்.

இதுகுறித்து மாவட்ட எஸ்பி. பிரதீப் உத்தரவின் பேரில் புறநகர் DSP. சிபிசாய் சௌந்தர்யன் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் அங்கமுத்து, கிருஷ்ணவேணி, பாலசுப்ரமணியன் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் ஆர்த்தி தியேட்டர் ரோடு வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்த குபேந்திரன் (58) என்றும், அப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட N.S.நகர், முனியப்பன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் கண்ணன் (54), கோபால்பட்டி, V. குரும்பபட்டியை சேர்ந்த கண்ணன் மனைவி சாந்தி(59), திருப்பூர், அவிநாசி மடத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேந்தர் மனைவி பிரியா (26) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இவர்கள் மூவரும் சேர்ந்து குபேந்திரனை தள்ளி விட்டதாகவும்,

அதில் குபேந்திரன் கீழே விழுந்து இறந்து விட்டதால் அவரை அட்டைப்பெட்டியில் வைத்து, ராமையன்பட்டி தரைப்பாலம் அருகே வீசி சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் கொலைக்கு பயன்படுத்திய குட்டி யானை வாகனத்தை பறிமுதல் செய்து, 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.