மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பந்த்ரா காவல் கட்டுப்பாட்டு அறையில் காவலராக பணிபுரிந்து வருபவர் லஷ்மண் தம்னா குராடே(35. இவருக்கு மும்பை தாராவி பகுதியில் வசிக்கும் தமிழர் ஒருவர் பழக்கமாகி தமிழகத்தில் பணம் இரட்டிப்பாக்கி தருபவர்கள் இருப்பதாக கூறி அங்கு வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுபாஷ் என்பவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அதன்படி சம்பந்தப்பட்ட சுபாஷ் என்ற பெயருடைய நபர் தங்களிடம் 500 ரூபாய் நோட்டுக்களாக பணம் கொடுத்தால், அதற்கு இரு மடங்காக 2000 ரூபாய் நோட்டுகளாக தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.
அதனை நம்பிய லஷ்மண் தனது நண்பருடன் கடந்த சில தினங்களுக்கு முன் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிக்கு வந்து அங்குள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார்.
அப்போது அவரை தொடர்பு கொண்ட செந்தில், சேகர்பாபு ஆகியோர் பணத்தை கேட்ட போது, அங்குள்ள தனியார் வங்கியில் காசோலை மூலமாக 35 லட்சம் ரூபாய் வரை மட்டுமே எடுக்க முடிந்ததாக தெரிவித்துள்ளார்.
அதனைக் கேட்ட அக்கும்பல் தற்போது இருக்கும் பணத்தை கொடுக்குமாறும் மீதத் தொகையை சில நாட்களில் தருமாறுக் கூறி பெரியகுளம் – தேவதானப்பட்டி சாலையில் தனியார் கல்லுரி அருகே உள்ள ஒரு வீட்டிற்கு வரவைத்துள்ளனர்.

அங்கிருந்த செந்தில் மற்றும் சேகர்பாபு ஆகியோர் லக்ஷ்மண் இடம் இருந்த பணத்தை சரிபார்த்துக் கொண்டிருந்த போது திடீரென காரில் வந்த ஒரு கும்பல் தங்களை போலீஸ் எனக் கூறி அவர்களை மிரட்டியதோடு பணத்தை கைப்பற்றி உள்ளனர்.
மேலும் லஷ்மணை ஒரு காரிலும், சேகர்பாபு, செந்தில் ஆகியோரை மற்றொரு காரிலும் ஏற்றிக் கொண்டு திண்டுக்கல் நோக்கி சென்றவர்கள் சிறிது நேரத்தில் புறவழிச்சாலையில் லஷ்மணை மட்டும் இறக்கி விட்டு விட்டு பணத்துடன் அவர்கள் அனைவரும் சென்றதாக பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் லஷ்மணை தொடர்பு கொண்ட நபர்களின் செல்போன் எண்களைக் கொண்டு விசாரணையில் ஈடுபட்டனர்.
அதில் முதற்கட்டமாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அஜீத்குமார் (29), திண்டுக்கல் மாவட்டம் நரேந்திரன் (41), ராம்குமார் ஆகிய மூவரை கைது செய்தனர்.
இதில் நரேந்திரன் என்பவர் தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்து தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டவர் எனத் தெரியவந்தது.
இதையடுத்து பிடிபட்ட மூவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய போலீசார் இந்த மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் மோசடி பணத்தையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.