• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பெண் உடலில் உயிருடன் 3 ஈக்கள்! டில்லி டாக்டர்கள் சாதனை..!

அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயது பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் இந்தியா வந்துள்ளார். அவருக்கு, கடந்த ஒன்றரை மாதமாக வலது கண்ணில் இமை வீக்கம், சிவந்து போதல், அரிப்புத் தன்மை ஏற்பட்டுள்ளது.

இந்தியா வருவதற்கு முன்பு, அமெரிக்காவில் உள்ள டாக்டர்களிடம் பரிசோதித்தார். அப்போது, எதனால் இப்படி ஏற்படுகிறது என்று அவர்களால் கண்டறிய முடியவில்லை. அதனால், நோய் அறிகுறியின் அடிப்படையில் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில், இந்தியா வந்த பின்னும் அவருக்கு கண் இமைக்குள் அவ்வபோது ஏதோ அசைவது போன்ற உணர்வு ஏற்பட்டதால், டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். அப்போது அவர், அமேசான் காடுகளுக்கு சென்று வந்த பின்பு, கடந்த 6 வாரங்களாகவே இந்த உணர்வு இருப்பதாக டாக்டர்களிடம் தெரிவித்துள்ளார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரது கண்ணில் அரிதான மியாசிஸ் எனப்படும், மனிதர்கள், பிற பாலூட்டிகளில் பரவும் ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்த பெரிய ஈக்கள் இருப்பது தெரியவந்தது. அந்தப் பெண் அமேசான் காடுகளுக்குச் சென்று வந்தபோது, இந்த ஈக்கள் உயிருடன் அவருடைய தோலை ஊடுருவி உள்ளே சென்றுள்ளன.

இதையடுத்து டாக்டர்கள், அவருக்கு எந்த மயக்க மருந்தும் கொடுக்காமல் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு வலது மேல் கண்ணிமை, கழுத்தின் பின்புறம் மற்றும் வலது முன்கை ஆகியவற்றிலிருந்து ஏறக்குறைய 2 செமீ நீளம் அளவில் மூன்று ஈக்களை 10 முதல் 15 நிமிடங்களில் அகற்றினர்.

‘இந்த ஈக்களை அகற்றாமல் விட்டால், நாளடைவில் திசுக்களில் கணிசமான அழிவை ஏற்படுத்தி இருக்கும். இதன் விளைவாக மூக்கு, முகத்தை சுற்றிய பகுதிகளில் அரிப்பு போன்றவை ஏற்படும். சில நேரங்களில் இது மூளைக்காய்ச்சல், மரணத்திற்கு வழிவகுக்கும்’ என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.