இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக மூன்று பேரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிரடியாக கைது செய்துள்ளது.
இந்திய ராணுவத்தின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானைச் சேர்ந்த உளவாளிகளுக்கு விற்றது தொடர்பாக ஆந்திர மாநிலத்தின் புலனாய்வு பிரிவு போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு 2023-ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
இதுகுறித்து என்ஐஏ நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் கிடைத்தன. பாகிஸ்தான் உளவாளிகளிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு இந்திய ராணுவத்தின் ரகசிய தகவல்களை ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த சிலர் கசிய விட்டது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து என்ஐஏ தீவிர விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில் கர்நாடகாவின் கார்வார் கடற்படை தளம் மற்றும் கேரளாவின் கொச்சி கடற்படை தளம் ஆகியவற்றில் ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவாளிக்கு விற்றது தொடர்பாக கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தை சேர்ந்த வேதன் லக்சமன் தண்டேல், அக்சய் ரவி நாயக் மற்றும் கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அபிலாஷ் ஆகிய மூன்று பேரையும் என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.