• Sat. Apr 27th, 2024

திருப்பத்தூரில் மருது பாண்டியர்களின் 220வது நினைவு தினக் கொண்டாட்டம்!..

தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள் மருது பாண்டியர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருதும், சின்ன மருதும் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடியதால் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள்.

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது விருப்பப்படி, காளையார் கோவிலில்1801 அக்டோபர் 27ல் உடல் அடக்கம் செய்யபட்டதாக வரலாற்று செய்திகள் கூறுகிறது. இன்று திருப்பத்தூரில் அரசு விழாவில் மருதுபாண்டியர் நினைவிடத்தில் காலை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடக்கி வைத்தார்.

தொடர்ந்து மருதுபாண்டியர்களின் சிலைகளுக்கு தமிழக அரசு சார்பில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சிலைகளுக்கு மாலை அணிவித்தது மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்திக் சிதம்பரம், திருநாவுக்கரசர், கே ஆர் ராமசாமி உள்ளிட்டவர்களும் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் காமராஜர் ஓ.எஸ்.மணியன், கோகுல இந்திரா உள்ளிட்டவர்களும் மருது பாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து சமுதாய தலைவர்களும் அரசியல் கட்சி பிரமுகர்களும் திருப்பத்தூர் பொதுமக்களும் மருதுபாண்டிய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்காக மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழாவில் பேசிய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், திட்டமிட்டபடி நகர்புற தேர்தல்கள் விரைவில் நடத்தப்படும். நகர்ப்புற தலைவர் தேர்தல், நேரடியாகவும் நடக்கலாம், மறைமுகமாகவும் நடக்கலாம். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மருது பாண்டியர்களின் படத்தை சட்டசபையில் இடம் பெற செய்ய வேண்டுமென்ற வாரிசுகளின் கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்.
மருது பாண்டியர்களின் உருவச்சிலை பிரதான நகரங்களில் விதிமுறைகளுக்கு உட்பட்டு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி நிறுவப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து, மதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ ஹரி ஹர தேசிய சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மருது பாண்டியர்களின் திருவுருவசிலைக்கு
மாலை அணிவித்து பின் அளித்த பேட்டியில் , வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்திற்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர்கள்தான் மருது பாண்டியர்கள். மருதுபாண்டியர்களுக்கும் மதுரை ஆதீனத்திற்கும் நீண்ட தொடர்பு தொடர்புண்டு மதுரை ஆதீனம் திருஞானசம்பந்த பெருமானுக்குக்கு வெள்ளித்தேர் செய்து கொடுத்தவர்கள். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக தான் மருதுபாண்டியர் நினைவு விழாவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறோம். மேலும், அவர் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் கார்த்தி சிதம்பரம் எம்.பி
அளித்த பேட்டியில், மருது சகோதரர்களின் தியாகம் இந்தியா முழுவதும் தெரிய வேண்டும். ஆனால் இந்தியாவில் சரித்திர புத்தகங்களில் தென்னகத்தை சேர்ந்தவர்களை பற்றி சரித்திரத்தில் இருக்காது. முழுக்க முழுக்க வடமாநிலங்களை சேர்ந்தவர்களே விடுதலை போரை முன்னெடுத்தது போல் சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கும். மத்திய அரசு பாட புத்தகங்களில் ஜான்சிராணிக்கு அளிக்கும் முக்கியத்துவம் வேலுநாச்சியாருக்கு இல்லை. இந்திய விடுதலை போரில் தமிழக விடுதலை போராட்ட வீரர்களின் பங்கு அதிகம். தமிழக விடுதலை போர் வீரர்களை இந்தியா முழுக்க அரிய செய்ய மாநில அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.

காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் அளித்த பேட்டியில், வாரிசுகள் அரசியலுக்கு வருவது என்பது பாவமல்ல என்றும், ஜனநாயக நாட்டில் இது இயல்பு என்றும் தெரிவித்ததுடன், அது அவரவர் உரிமை என்றார். மக்களின் பணத்தை வழிப்பறி செய்வதை போல மத்திய அரசிற்கு பணம் தேவைப்படும்போது எல்லாம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிறது என்றார். மேலும் ஸ்டாலின் தலைமையிலான அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது என்றார். கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். நாடாளுமன்றம், சட்டமன்றம், ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் அமைந்த கூட்டனி போல வருகிற நகர்புற தேர்தலிலும் திமுக,காங்கிரஸ் கூட்டனி தொடரும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *