• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பட்டறையில் வைத்திருந்த நகைகளை கொள்ளையடித்த 2பேர் கைது..,

BySeenu

Dec 9, 2025

கோவை: கோவையில் மரப்பெட்டியுடன் தங்க நகை பட்டறையில் வைத்திருந்த நகைகளை கொள்ளையடித்த இரண்டு பேர் 24 மணி நேரத்தில் போலீசாரால் பிடிக்கப்பட்டனர்.

கோவை வெரைட்டி ஹால் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாமியார்ஐயர் வீதியில் நவநீதகிருஷ்ணன் என்பவர் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று காலை நவநீதகிருஷ்ணனை தொடர்பு கொண்ட பக்கத்து வீட்டார் உங்கள் பட்டறை கதவு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் உடனடியாக நவநீதகிருஷ்ணன் சென்று பார்த்த பொழுது பட்டறையில் வைத்திருந்த ஒரு கிலோ 15 கிராம் தங்கநகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதற்காக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் இதர தகவல்களின் அடிப்படையிலும் முருகன் மற்றும் சின்னதுரை ஆகிய இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இருவரிடமிருந்தும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் நடைபெற்றது, அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கோவை தெற்கு மாநகர காவல் துணை ஆணையர் கார்த்திகேயன், நான்கு தனி படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் இதர தகவல்களின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இரண்டு பேரில் ஒருவர் முருகன், அவர் ஏற்கனவே ஆர்.எஸ் புரம் பகுதியில் நகை கடையை உடைத்து தங்க நகையை திருடிய வழக்கில் தண்டனை பெற்று வெளிவந்தவர் என தெரிவித்தார். மற்றொருவர் சின்னதுரை, அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் அவர் மீதும் இது போன்ற கொள்ளை வழக்குகள், கஞ்சா வழக்குகள் இருப்பதாக தெரிவித்தார். இருவரையும் கணுவாய் பகுதியில் உள்ள அவர்களது இல்லத்தில் வைத்து பிடித்ததாகவும் கூறினார்.

இவர்கள் நேற்று இரவு 2:30 மணி அளவில் அவ்வழியாக சென்ற அவர்கள் முதலில் ஒரு கடையை உடைக்க முயன்றதாகவும் ஆனால் அது இரும்பு கதவுகள் என்பதால் அதை விட்டுவிட்டு இந்த கடையில் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும் கொள்ளை அடிக்கப்பட்ட அனைத்து நகைகளும் முழுமையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இவர்கள் இருவரும் உறவினர்கள் என்றார். இவர்கள் இந்த கடையில் நகையை வைத்திருந்த மரப்பெட்டியுடன் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இதுபோன்று நகைக்கடைகளில் சிசிடிவி கேமராக்களை கண்டிப்பாக பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என அறிவுறுத்தி இருப்பதாகவும் நகை பட்டறை வைத்திருப்பவர்கள் நகைக்கடைக்காரர்கள் இரும்பு கதவுகளை பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்தார்.

கைதான இருவரும் அப்பகுதிகளில் மண் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்களில் வரும் தங்க துகள்களை சேகரிக்கும் பணியை மூன்று மாதங்களாக செய்து வந்ததாகவும் எனவே அவர்கள் இதனை செய்திருக்கலாம் என தெரிவித்தார்.