• Tue. Jan 27th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

அறிவியல் இயக்கத்தின் 17 வது புதுக்கோட்டை மாவட்ட மாநாடு..,

Byமுகமதி

Jan 27, 2026

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 17 வது புதுக்கோட்டை மாவட்ட மாநாடு கந்தர்வகோட்டை தமிழ் மீனா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கருத்தரங்கம், பிரதிநிதிகள் மாநாடு, விழிப்புணர்வு பேரணி, பொதுக்கூட்டம் என அறிவியல் அறிவோம் அறிவியலால் இணைவோம் என்ற மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றது.

கருத்தரங்கத்திற்கு பேராசிரியர் பிச்சைமுத்து தலைமை வகித்தார். அறிவியல் மாநில பொதுக்குழு உறுப்பினர் மணவாளன் தொடக்க உரை நிகழ்த்தினார். MSSRF முதுநிலை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார் கருத்துரை வழங்க கவிஞர் ஜிவி சிறப்புரையாற்றினார். பின்னர் நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வீரமுத்து வேலை அறிக்கையை முன் வைத்து பேசினார். மாவட்டப் பொருளாளர் விமலா வரவு செலவு அறிக்கை முன் வைத்தார். பின்னர் மாவட்ட தலைவராக முனைவர் பிச்சைமுத்து, மாவட்ட செயலாளராக ஜெயராம், மாவட்ட பொருளாளராக சோபா, துணைத்தலைவர்கள் இணைச் செயலாளர்களென 17 அடங்கிய புதிய நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது.

புதிய நிர்வாகிகளை மாநில துணைத்தலைவர் வ. சேதுராமன் வாழ்த்திப் பேசினார்.

பின்னர் அக்கச்சிப்பட்டியிலிருந்து கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் வரை நடைபெற்ற அறிவியல் விழிப்புணர்வு பேரணியை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் தோழர் மா. சின்னதுரை அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த பேரணியில் 250க்கும் மேற்பட்ட அறிவியல் இயக்க உறுப்பினர்களும், இளைஞர்கள், பள்ளி மாணவர்களும் கலந்துகொண்டனர். தொடர்ந்து பேருந்து நிலையம் அருகிலுள்ள செம்மொழி கலையரங்கில் நடைபெற்ற பொது மாநாட்டு நிகழ்வின் துவக்கமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளிக்கல்வி துறையின் சார்பில் ஏற்கனவே நடைபெற்ற பல்வேறு தேர்வுகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை வழங்கினார்.

மூடநம்பிக்கைகளுக்கு எதிராக அறிவியல் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு நடைபெற்ற அறிவியல் இயக்க இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு கல்விக்கொள்கையை வரவேற்று பாராட்டு தெரிவிப்பது,
மாணவர்கள் தொடர்ந்து உயர்கல்வியை எளிதாக பெரும் வகையில் மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கும் புதுமைப்பெண், தமிழ்ப்புதவன் ஆகிய திட்டங்களை வரவேற்று பாராட்டு தெரிவிப்பது, உயரிய அரசுப் பணிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகையுடன் பயிற்சியளிக்கும் நான் முதல்வன், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவிடும் அன்புக்கரங்கள் உள்ளிட்ட மாணவர் மற்றும் மக்கள் நலனை காக்கும் தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கு பாராட்டு தெரிவிப்பது எனவும்
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ் மற்றும் திறனாய்வு தேர்வு ஆகியவற்றை வரவேற்று தமிழ்நாடு அரசு நன்றி தெரிவித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் அரசு பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் தடையின்றி நடைபெறுவதற்கு உகந்த சூழலை அரசு உறுதிப்படுத்த வேண்டும்,
மாவட்டந்தோறும் அறிவியல் பூங்காக்கள் ஏற்படுத்த வேண்டும், மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும், தஞ்சாவூர் முதல் மானாமதுரை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு செல்லும் ரயில் பாதைகளை இணைக்கும் வகையில் கந்தர்வகோட்டை வழியாக ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்ட ரயில் வழித்தடத்தை ஏற்படுத்தி புதியதாக ரயில்கள் இயக்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,

காவிரி ஆற்று உபரி நீர் செங்கிப்பட்டி வழியாக கந்தர்வகோட்டைக்கு ஏற்கனவே உள்ள நீர்நிலை, குளங்களின் பாதைகளை சீரமைத்து கொண்டு வர அரசு வழிவகை செய்ய வேண்டும், அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வகையில் வருடந்தோறும் அறிவியல் சுற்றுலா ஏற்பாடு செய்ய வேண்டும், தமிழ்நாடு அரசு கனிம வளங்களை பாதுகாத்திட தனிச்சட்டம் நிறைவேற்ற வேண்டும்,

புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் 5000 உறுப்பினர்களை சேர்ப்பது, மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் புத்தகத் திருவிழாக்களை நடத்த முயற்சி எடுப்பது,
மது உள்ளிட்ட போதை விற்பனை செய்யும் அரசன் விற்பனை மையங்களில் மது வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் குறைந்தபட்ச வயதை அரசு அறிவிக்க அறிவித்து இளைஞர்களின் வாழ்க்கையை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.