• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சுனாமி எனும் ஆழிப்பேரலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள்

பதினேழு வருடங்களுக்கு முன்னால், 2004 டிசம்பர் 26 ஆம் திகதி இந்து சமுத்திரக் கரையோர நாடுகளைக் கடற்கோள் சூழ்ந்ததில் இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருந்தனர். இலங்கையில் மட்டும் முப்பத்திஐயாயிரம் பேர் வரையில் கொல்லப் பட்டிருந்தனர். இனியொரு தடவை கடற்கோள் சூழ்ந்தால் இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர்
பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

கடற்கோள் நினைவுநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இயற்கைப் பேரிடரான கடற்கோளைத் தடுக்க முடியாது போனாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தணிவிக்க முடியும். இலங்கையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கண்டல் மரங்கள் அடர்ந்திருந்த கப்புஹென்வல கிராமத்தில் கடற்கோளால் இரண்டே இரண்டு உயிர்களை மட்டுமே பறிக்க முடிந்திருந்தது.

ஆனால், அதே மாவட்டத்தில் கண்டல்கள் அழிக்கப்பட்ட வாண்டுறுப்பா கிராமத்தில் ஆழிப்பேரலை ஆறாயிரம் உயிர்களை வாரிச் சென்றுள்ளது. கடல் அலைகளின் சீற்றத்தை 90 விழுக்காடு குறைத்துவிடும் வல்லமை கண்டற் காடுகளுக்கு உண்டு. ஆனால், கடற்கோள் “இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய்” என்று உலகு அதிரப் போதித்த பின்பும் பட்டும் திருந்தாத பாவிகளாக இயற்கையை நாம் தொடர்ந்தும் சூறையாடி வருகிறோம்.
கடலோரக் கண்டற்காடுகளை நாம் மென்மேலும் கபளீகரம் செய்துவருகிறோம். கடற்கரையோர மணல் மலைகள் தினம் தினம் கொள்ளை போகின்றன. சுண்ணக் கற்பாறைகள் அகல பாதாளத்துக்குத் தோண்டப்படுகின்றன. கடலருகே இறாற் பண்ணைகள் அமைக்கப்படுகின்றன. கடலக முருகைக் கற்பாறைகள் அழிக்கப்படுகின்றன. இழுவைப் படகுகள் கடலடி வளங்களை இடையறாது துவம்சம் செய்து வருகின்றன. இப்படி, தலைமுறை தலைமுறையாக வளமூட்ட வேண்டிய கடலையும் கடல் சார்ந்த வளங்களையும் தொடர்ந்தும் சூறையாடி வருகின்றோம். இவற்றுக்கும் மேலாக நாம் வளியில் குவித்துக்கொண்டிருக்கும் கரிக்காற்று பூமியைச் சூடுபடுத்துவதால் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது.

மிகப்பெரும் மனிதப் பேரழிவை நிகழ்த்திவிட்டு எதுவுமே நடவாதது போல உறங்கிக்கிடக்கும் கடல் இன்னொரு முறை பொங்கிச் சீறமாட்டாது என்பதற்கு உத்தரவாதம் எதுவுமில்லை. இன்னுமொரு தடவை கடற்கோள் சூழ்ந்தால் அது ஏற்படுத்தும் அழிவு முன்பைவிட பன்மடங்கானோரைப் பலியெடுக்கும் பேரழிவாகவே அமையும்.

எனவே, கடற்கோளின் படிப்பினைகளை ஏற்று இயற்கையோடு இசைவுற வாழ்ந்து, இயற்கை வளங்களைப் பாதுகாத்து, அளவோடு நுகர்ந்து வளமோடு வாழ்வோமெனக் கடற்கோள் நினைவுநாளில் உறுதியேற்போம். இதுவே கடற்கோளில் மாண்ட நம் உறவுகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.