உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் 15-வது செயற்குழு கூட்டம் இன்று பிற்பகல் அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை மனமகிழ் மன்றத்தில் நடைபெற்றது. கூட்டமைப்புத் தலைவர் மு. ஞானமூர்த்தி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம் வரவேற்புரை ஆற்றி விளக்க உரை நிகழ்த்தினார்.

ஒருங்கிணைப்பாளர் தமிழரிமா தா. சம்பத், அமைப்புச் செயலாளர் பொறியாளர் வ. காசிநாதன், தலைமை நிலையச் செயலாளர் நல்லாசிரியர் க. சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணைத் தலைவர்கள் ச.அ. பெருமாள், கோ. வெங்கடேசன், தா. பிச்சி ஆதிலிங்கம், துணைப் பொதுச் செயலாளர்கள் த. பழநிவேல், முனைவர் இரா. வனிதா, முனைவர் இரா. திருமூர்த்தி, தலைமைத் துறை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கருத்துரை வழங்கினர்.

கூட்ட முடிவில் மாநில பொருளாளர் நல்லாசிரியர் பெ. சௌந்தர்ராசன், செயற்குழுவில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தலைமைத் துறை இயக்குநர் பி. செல்வேந்திரன், அரியலூர் மாவட்டத் தலைவர் பெ. நாகமுத்து, பொருளாளர் மொ. ரெ. தியாகராசன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். கூட்டத்தில் அமைப்பின் நிர்வாகப் பணிகள், எட்டாவது பொதுக்குழு, உலகத் திருக்குறள் மாநாடு நடத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 20 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

அவற்றில், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் திருவள்ளுவர் சிலை நிறுவல், ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களில் திருக்குறள் பாடமாக சேர்த்தல், தமிழை மத்திய அரசின் ஆட்சிமொழியாக அறிவித்தல், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க சட்டம் கொண்டுவரல், ஐ.நா. யுனெஸ்கோ திருக்குறளை உலகப் பொதுநூலாக அறிவித்தல், சென்னை–மதுரை உயர் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவித்தல், பொங்கலை சர்வதேச விழாவாக அறிவித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் இடம்பெற்றன.
மேலும் விவசாயிகள் நலன், மின்கட்டண வசூல் முறை, சமூக நீதி, தமிழர் வரலாறு பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இத்தீர்மானங்களை வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்ய வேண்டும் என உலகத் திருக்குறள் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது.










