கரைந்து போன 17 கோடி ரூபாய்…
ஊழல் சுரங்கப் பாதை!
திண்டுக்கல்- கரூர் சாலையில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையில் 10 ஆண்டுகளாக தொடர்ந்து நீர் தேங்கி வருவதால், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் நகரில் இருந்து கோவிலூர், எரியோடு, குஜிலியம்பாறை வழியாக கரூர் செல்லும் பழைய கரூர் சாலையின் குறுக்கே ரயில்பாதை செல்கிறது. ரயில் பாதையில் ரயில்கள் வரும்போது கேட் அடைக்கப்படுவதால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் நீண்டநேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதை தவிர்க்க ரயில்வே பாதையின் கீழே சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு துவக்கதிலேயே மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியது.
ரயில்வே பாதையின் கீழ் அமைக்கப்பட்ட சுரங்கப் பாதைகள் பல, மழை காலத்தில் நீர்தேங்குவதால் போக்குவரத்து தடைபடும் நிலை ஏற்படுகிறது. எனவே மேல்மட்ட பாதை அமைக்கவேண்டும் என்ற மக்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
ரூ.17.45 கோடியில் ரயில்பாதைக்கு கீழே சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2015 ஆம் ஆண்டு துவங்கியது. இந்த வழியே சென்று வந்த வாகனங்கள் மாற்றுப் பாதையில் மூன்று கிலோ மீட்டர் சுற்றி சென்றன.
சுரங்கப்பாதை பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே மழை காலத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்க துவங்கியது. இதனால் பணிகள் தாமதமானது. தண்ணீர் வற்றியவுடன் மீண்டும் பணி என 9 ஆண்டுகளாக நடைபெற்ற பணி ஒருவழியாக 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் முழுமையடையும் நிலையை அடைந்தது.
இதிலும் அணுகுசாலைகள், சுரங்கப்பாதையின் நுழைவு பகுதி சாலை. மழைநீர் தேங்கினால் வெளியேற்ற மோட்டார் அறை என பல பணிகள் நிறைவேறாமல் இருந்தன.
இந்நிலையில் முறையாக அனைத்து பணிகளும் முடிந்து திறப்பு விழா காணாதநிலையில், அதிகாரபூர்வமற்ற முறையில் சுரங்கப்பாதை சாலையை மக்களே பயன்படுத்த துவங்கினர். இதை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.
கடந்த சில மாதங்களாக மக்கள் பயன்படுத்தி வந்தநிலையில் திடீரென சில நாட்களுக்கு முன் பெய்த ஒரு நாள் மழைக்கு தண்ணீர் தேங்கவே இதில் கார் ஒன்று சிக்கியது. அடுத்தடுத்து மழை பெய்தததால் இந்த பாதை மூடப்பட்டது.
தொடர் மழையால் சுரங்கப்பாதையில் நீச்சல் குளம் போல் மழை நீர் தற்போது தேங்கிநிற்கிறது.
மேலும் மழைநீர் வற்றினாலும் இந்த பகுதியில் தண்ணீர் ஊற்றெடுக்க துவங்கியுள்ளதால் இப்போதைக்கு நீரை வெளியேற்றுவது என்பது சாத்தியமில்லாத நிலையே உள்ளது.
மழைக்கு முன்பு சுரங்கபாதை வழியாக சென்ற வாகனங்கள் தற்போது மீண்டும் மூன்று கிலோ மீட்டர் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ரயில்பாதைக்கு அடுத்து உள்ள எம்.வி.எம்.நகர், ஏ.கே. எம்.ஜி நகர், கூட்டுறவு நகர், காந்திஜி நகர், விக்னேஷ் நகர், ராஜ் நகர், கணேஷ் நகர், நந்தவனப்பட்டி, மல்லிகை நகர், விநாயகர் நகர், ராஜகாளியம்மன் நகர், அய்யம்மாள் நகர், என்.எஸ்.நகர் பகுதி உள்ளிட்ட குடியிருப்பு வாசிகள் நகருக்குள் வர சிரமப்படவேண்டிய நிலை உள்ளது.
சுரங்கப்பாதை பணி துவங்கியது முதல் இன்று வரை கடந்த 10ஆண்டுகளாக அவதிப்பட்டு வரும் மக்கள் தற்போது பாதை மூடப்பட்டுள்ளதையடுத்து போராட்டத்திற்கு தயாராகி நகரில் மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
இதில் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் சுரங்கப்பாதை பணியை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.இல்லை எனில் ஆர்ப்பாட்டம், மறியல், வீடு தோறும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும்.பின்னர் இறுதியாக தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் போடுவதாக அப்பகுதி மக்கள் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டினர்.
பணி துவங்கியபோதே இந்தநிலை ஏற்படும் என மக்கள் உள்ளிட்ட பலரும் எச்சரித்தும் கண்டுகொள்ளாமல் பணிசெய்த நெடுஞ்சாலைத்துறையினர், தற்போது பதில் அளிக்க முடியாத நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் ஆகஸ்ட் 31 கடந்தும் பணிகள் முடிவடையாததால் கொதிப்படைந்த பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கிவிட்டனர்.
போராடியவர்களிடம் அரசியல் டுடே சார்பாக பேசியபோது,
“கடந்த 10 ஆண்டுகளாக போக்குவரத்துக்கு 3 முதல் ஐந்து கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
ரூ.17.45 கோடியிலான திட்டம், மக்கள் பயன்பாட்டிற்கு வரும்முன்னரே பாழகிவிட்டது. அரசின் வரிப்பணம் தண்ணீரில் கரைந்து எவ்வாறெல்லாம் வீணாகிறது என்பதற்கு இந்த சுரங்கப் பாதையே ஒரு உதாரணம்” என்றனர்.
போராட்ட ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்க பூபதியிடம் நாம் பேசும்போது, “நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மாறி மாறி பேசுகிறார்கள். மே மாதம் பணி முடிந்துவிடும் என்றார்கள் முடியவில்லை. மே மாதத்துக்குப் பின்பு எந்த பணியும் நடக்கவில்லை. இந்நிலையில் நாங்கள் போஸ்டர் ஒட்டிய பின்பு அவசர அவசரமாக பணிகள் நடத்துவதால் அனைத்து பணியும் தரமற்று உள்ளன. வாகன ஓட்டிகள் நிச்சயம் விபத்தை சந்திப்பார்கள். பயணிகளின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. இதனால் நாங்கள் கலெக்டரை சந்திக்க திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.
இது குறித்துநெடுஞ்சாலைத் துறையின் மதுரை டிவிஷனல் இன்ஜினியர் ரமேஷிடம் அரசியல் டுடே சார்பில் விளக்கம் கேட்டோம்.
”நான் தற்போது தான் பொறுப்பேற்றுள்ளேன். இந்த பிரச்சனை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து தரமான பணிகள் நடக்க ஏற்பாடு செய்வேன்” என்றார்.
மக்கள் பணம் எவ்வாறெல்லாம் கரைகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்!
