• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மணல் கடத்தலில் ஈடுபட்ட 10 பேர் கைது..,

ByAnandakumar

Jun 7, 2025

கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆறுகளில் மணல் அள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ல், கரூர் மாவட்டத்தில் நன்னியூர் புதுார், மல்லம்பாளையம் காவிரி ஆற்று பகுதிகளில், நீர்வளத்துறை சார்பில் இரண்டு குவாரிகள் திறக்கப்பட்டன. ஆனால், அமலாக்கத்துறை நடவடிக்கை காரணமாக இரண்டு குவாரிகளும் மூடப்பட்டன.

இந்நிலையில், நேற்று முன்தினம் திருச்சி சரக டி.ஐ.ஜி., வருண்குமார் உத்தரவின்படி தனிப்படை போலீசார், கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆறுகளில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுகிறதா என சோதனை செய்தனர். அப்போது, கரூர் அருகே மண்மங்கலத்தில் தனியாருக்கு சொந்தமான, மணல் சலிப்பகத்தில், காவிரி ஆற்று மணல் சட்ட விரோதமாக அள்ளப்பட்டு, வெளி மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

கரூர் அருகே மண்மங்கலத்தில் திமுக பொதுக்குழு உறுப்பினர் காளியப்பனுக்கு சொந்தமான மணல் சலிப்பகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 26 லாரிகள், மூன்று கார்கள், ஒரு லேப்டாப், 4 ரப்பர் ஸ்டாம்புகள், 11 வங்கி காசோலைகள், ஒரு பில் புக், 100 யூனிட் மணல் மற்றும் இரண்டு லட்சத்து 26 ஆயிரத்து 900 ரூபாயை, திருச்சி தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பிறகு, இந்த வழக்கு வாங்கல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சட்ட விரோத மணல் கடத்தலில் ஈடுபட்டதாக சதீஷ்குமார், சேகர், அரவிந்த், லோகநாதன், ரவி, தீபக்குமார், ராமசாமி, தனபால், லட்சுமணன், அழகுராஜ் ஆகிய 10 பேரை வாங்கல் போலீசார் கைது செய்து கரூர் கிளை சிறையில் அடைத்தனர்.