• Sat. Apr 27th, 2024

டெல்லியில் 10 நாட்கள் அசைவ கடைகள் மூடல்..இது தான் காரணம்

நவராத்திரியை முன்னிட்டு தெற்கு டெல்லி முழுக்க மாமிசம் கடைகளை மூடுவதற்கு மேயர் முகேஷ் சூர்யன் உத்தரவிட்டுள்ளார்.

மாநகராட்சி மேயர் ஒருவர் இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்து டெல்லியில் இதுவே முதல்முறையாகும்.
நாடு முழுக்க தற்போது ஹலால் உணவு பிரச்சனையும் மாட்டுக்கறி பிரச்சனையும் தலை தூக்க தொடங்கி உள்ளது. கர்நாடகாவில் ஹலால் உணவு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

முன்பு மாட்டுக்கறி சாப்பிடுவது மட்டுமே பிரச்சனையாக இருந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் தற்போது ஆட்டுக்கறி, கோழிக்கறி சாப்பிடுவதும் பிரச்சனையாகி உள்ளது.

இந்த நிலையில்தான் தெற்கு டெல்லியில் நவராத்திரியை முன்னிட்டு அசைவ கடைகளை அடைக்க டெல்லி தெற்கு மேயர் முகேஷ் சூர்யன் உத்தரவிட்டுள்ளார். இந்துக்களின், விரதம் இருப்பவர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் கடைகளை அடைக்க வேண்டும் என்று மாநகராட்சி அலுவலர்களுக்கு அவர் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

ஏப்ரல், 2- 11 வரை மொத்தம் 10 நாட்கள் மாமிச கடைகளை மொத்தமாக மூட வேண்டும் என்று இவர் உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், நவரத்திரி என்பது இந்துக்கள் கொண்டாடும் புனித பண்டிகை. இந்த பண்டிகை காலத்தில் மக்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வார்கள். கடுமையான சைவ உணவு விரதத்தை கடைபிடிப்பார்கள். அவர்கள் அசைவம் சாப்பிட மாட்டார்கள். அதேபோல் மது அருந்த மாட்டார்கள். கோவிலுக்கு அருகே இருக்கும் பகுதிகளை சுத்தம் செய்து அலங்காரம் செய்வார்கள்.

இந்த நாட்களில் இந்துக்கள் தினமும் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வார்கள். ஏன் பலர் வீடுகளில் வெங்காயம், இஞ்சி கூட பயன்படுத்த மாட்டார்கள். அதேபோல் அவர்கள் பொது இடங்களிலும், கோவில்களிலும் மாமிசங்களை காட்சிப்படுத்தப்படுவதை விரும்ப மாட்டார்கள். இதனால் அவர்களின் மத ரீதியான உணர்வுகள் புண்படும்.

அதேபோல் மாமிசங்களை அவர்கள் பொது இடங்களில் பார்ப்பதாலும், அதன் நாற்றத்தாலும் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் மத ரீதியான நம்பிக்கை இதனால் பாதிக்கப்படும். பொது இடங்களில் மாமிச கழிவுகளை போடுவது, அதை நாய் சாப்பிடுவதும் சுகாதாரமான விஷயம் கிடையாது. அது சுகாதாரம் இல்லை என்பதை தாண்டி, மக்கள் இப்படிப்பட்ட காட்சிகளை பார்க்க விரும்ப மாட்டார்கள்.
அதனால் தெற்கு டெல்லி முழுக்க நவராத்தி நடக்கும் ஏப்ரல் 2- ஏப்ரல் 11 வரையிலான நாட்களில் மாமிசம் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. இந்துக்களின் உணர்வுகளை, நம்பிக்கைகளை, சுத்தத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் இதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். விதிகளை மீறி மாமிசம் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சி மேயர் ஒருவர் இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்து டெல்லியில் இதுவே முதல்முறையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *