• Mon. Jan 26th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

நற்றிணைப் பாடல் 272:

Byவிஷா

Oct 14, 2023

கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல்,
படிவ மகளிர் கொடி கொய்து அழித்த
பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை,
கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு,
இருஞ் சேற்று அயிரை தேரிய, தெண் கழிப்
பூஉடைக் குட்டம் துழவும் துறைவன்
நல்காமையின், நசை பழுதாக,
பெருங் கையற்ற என் சிறுமை, பலர் வாய்
அம்பல் மூதூர் அலர்ந்து,
நோய் ஆகின்று; அது நோயினும் பெரிதே.

பாடியவர்: நல்வெள்ளையார்
திணை: நெய்தல்

பொருள்:

 கடல்காக்கை சிவந்த வாயை உடையது. நோன்பு இயற்றும் மகளிர் வெண்மணலில் தழைத்திருக்கும் அடும்புக் கொடியை கொய்து எறிவர். பெண்-கடல்காக்கை அந்தக் கொடியில் முட்டையிட உட்கார்ந்து இருக்கும்போது ஆண்-காக்கை அதற்கு உணவு அளிக்கும்பொருட்டு உப்பங்கழியில் பூத்துக் கிடக்கும் கருஞ்சேற்றில் அயிரை மீனைத் தேடிக்கொண்டிருக்கும். இப்படிப்பட்ட துறையை உடையவன் என் தலைவன். அவன் எனக்கு இன்பம் தரவில்லை. அதனால் என் ஆசை பழுதாயிற்று. செய்வதறியாமல் சிறுமைப் பட்டுக்கொண்டிருக்கிறேன். பலரும் எங்கள் உறவைப் பற்றி அங்குமிங்குமாகப் பேசிக்கொள்கின்றனர். அது நான் படும் வேதனையை விடப் பெரிதாக இருக்கிறது. தலைவி தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.