• Sat. Feb 15th, 2025

வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு இதை அறிவுறுத்துங்க.. தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!..

By

Aug 14, 2021

அரசு நிலங்களில் சட்ட விரோத சுரங்க நடவடிக்கைகளையும், நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளையும் தடுக்க அடிக்கடி ஆய்வுகள் மேற்கொள்ளும்படி, மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகாவில் உள்ள அப்பியம்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுப்பதை தடுத்து, அவற்றை பாதுகாக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி, அந்த கிராமத்தைச் சேர்ந்த சரவணன், ஜெய்சங்கர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கிராமத்தில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மனுதாரர்களே அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அரசு நிலங்களில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளுக்கு எதிராகவும், நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்க, தர்மபுரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள மனுதாரர்களுக்கு எதிராகவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

மேலும், அரசு நிலங்களில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளையும், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பையும் தடுக்க அடிக்கடி ஆய்வுகள் நடத்த மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.