
கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை வனப்பகுதியில் சுமார் 10 வயது மதிக்கதக்க ஆண் யானை இறந்து கிடந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் யானையின் உடலை கைப்பற்றி மருத்துவர்கள் உதவியுடன் உடற்கூர் ஆய்வு செய்தனர்.பின்னர் வனப்பகுதியில் யானைகளுக்குள் நடந்த மோதலில் யானை இறந்ததாக தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே தனியாருக்கு சொந்தமான கிராம்பு எஸ்டேட்டில் சுமார் 10 வயது மதிக்கதக்க ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதாக இன்று வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தார்கள். இதனை அடுத்து யானை இறந்து கிடந்த பகுதிக்கு வனத்துறையினர் சென்று யானையின் உடலை கைப்பற்றினார்கள். மேலும் யானை நோய் வாய்ப்ட்டு இறந்ததா? அல்லது வேறு காரணத்தால் இறந்ததா? என தெரிந்து கொள்ளதற்காக வனத்துறையினர் திருநெல்வேலி வன கால்நடை மருத்துவ பிரிவு மருத்துவர்களை சம்பவ இடத்திற்கு அழைத்தார்கள். அங்கு வந்த கால்நடை மருத்துவர்கள் இறந்த யானையை உடற்கூர் ஆய்வு செய்ததோடு யானையின் உடல் பாகங்கள் சிலவற்றை பரிசோதனைக்காக எடுத்து சென்றார்கள். பரிசோதனை முடிவில் வனப்பகுதியில் இரண்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 10 வயது யானை இறந்தது தெரியவந்துள்ளது. யானையின் உடல் அதே வனப்பகுதியில் குழி தொண்டி புதைக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த மாதம் நோய் வாய்ப்பட்டு யானை ஒன்று இறந்த நிலையில் அடுத்த ஒரு மாதத்திற்குள் அடுத்ததாக யானை ஒன்று இறந்தது குமரி மாவட்ட வன விலங்கு ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.