

தமிழ்நாட்டில் வணிகர்களுக்கான நல வாரிய உறுப்பினர்களாக சேர நிர்ணயிக்கப்பட்ட ரூ.500 பதிவுக்கட்டணத்தை ஸ்டாலின் தலைமையிலான அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாநில வரி மதுரை கோட்ட இணை ஆணையர் குறிஞ்சிசெல்வன் விடுத்துள்ள ஆணையில் கூறியிருப்பதாவது.
1989ம் ஆண்டு தமிழ்நாடு வணிகர்கள் நலவாரியம் உருவாக்கப்பட்டது. இந்த நலவாரியம் மூலம் சிறு குறு வணிகர்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாரியத்தில் உறுப்பினராக சேர ரூ.500 பதிவு கட்டணம் செலுத்துவதிலிருந்து தமிழ்நாடு முதல்வர் விலக்களித்துள்ளார். இதன் மூலம் அனைத்து வணிகர்களையும் இந்த நலவாரியத்தில் சேர்த்து திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த மாவட்ட மற்றும் வட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த முதன்மை செயலாளர்உத்தரவின் பேரில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நல வாரியத்தில் உறுப்பினர்களாவதற்கு ஜி.எஸ்.டி. பதிவு எண் பெற்றிருத்தல் வேண்டும் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட டி.மற்றும் ஓ டிரேடு உரிமச்சான்று என ஏதேனும் ஒன்றை பெற்றிருத்தல் வேண்டும். என்ற இணைய தளத்தில் உள்ள எளிய படிவத்தை பூர்த்தி செய்தோ அல்லது பிரிண்ட் வடிவத்தில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்தோ அலுவலகத்தில் வழங்குவதன் மூலம் வணிகர்கள் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
மதுரை மாவட்டத்தில் உள்ள நகராட்சி பேரூராட்சி கிராம ஊராட்சிகளில் உள்ள சிறு குறு வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நலவாரியத்தில் சேர நடவடிக்கை மேற்கொள்ளவும் கூட்டங்கள் நடத்துவதற்கு மதுரை ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கடிதக்குறிப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. இது தொடர்பாக வணிகர்களுக்கு உதவ மதுரை கோட்ட துணை வணிக வரி அலுவலர் மற்றும் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிஞ்சி செல்வன் தனது ஆணையில் குறிப்பிட்டுள்ளார்.
வருகிற ஆக.9ம் தேதி மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் காலை 11மணிக்கு கிழக்கு மற்றும் மேற்கு உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த வணிகர்களுக்கு கூட்டம் நடைபெறுகிறது.
பிற்பகல் 3 மணிக்கு பரவை பேரூராட்சி கூட்டரங்கிலும் ஆக.10ம் தேதி காலை 11 மணிக்கு கொட்டாம்பட்டியில் கொட்டாம் பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கிலும் மாலை 3 மணிக்கு மேலூர் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கிலும் கூட்டம் நடைபெறும்.
ஆக.11ம் தேதி காலை 10.30 மணி அளவில் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கிலும் பிற்பகல் 3 மணிக்கு திருமங்கலம் நகராட்சி கூட்ட அரங்கிலும் கூட்டம் நடைபெறுகிறது.
ஆக.12ம் தேதி காலை 10 மணிக்கு கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கிலும் மாலை 2.30 மணிக்கு டி.கல்லூப்பட்டி கூட்ட அரங்கிலும் கூட்டம் நடைபெறுகிறது.
ஆக.13. தேதி காலை 10 மணிக்கு உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கிலும் மாலை 2.30 அளவில் செல்லபம்பட்டி ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கிலும் கூட்டம் நடைபெறுகிறது.
சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலர்களுடன் இணைந்து சிறப்பாக நடத்துவதுடன் அதிக அளவிலான வணிகர்களை நலவாரியத்தில் பதிவு செய்து ஊக்குவித்த உதவிட வேண்டுமென துணை மாநில வணிகவரி அலுவலர்கள் மற்றும் உதவியாளர்களை இணை ஆணையர் குறிஞ்சிசெல்வன் கேட்டுக்கொண்டுள்ளார்.

