• Fri. Apr 18th, 2025

தமிழக பட்ஜெட்… அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!…

By

Aug 13, 2021

தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அருதிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைத்த முதல் நாளில் இருந்தே பல்வேறு அதிரடி முடிவுகள் மற்றும் திட்டங்களை அறிவித்து வருகிறது. குறிப்பாக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் திமுக அரசு இருந்து வருகிறது. 

ஆட்சி பொறுப்பேற்றவுடன் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும், சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும், மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை திமுக அளித்துள்ள நிலையில், அதற்கான அறிவிப்புகளை பட்ஜெட்டில் எதிர்நோக்கி மக்கள் காத்திருக்கின்றனர்.அதே நேரத்தில் கடுமையாக நிதி நெருக்கடிக்கு மத்தியில் இந்த பட்ஜெட்டை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.

ஏற்கனவே திமுக சார்பில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை அதிமுக ஆட்சியை களங்கப்படுத்தும் விதமாகவும், மக்களுக்கு பொய்யான தகவல்களை கொடுப்பதாகவும் அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். அத்தோடு தங்களது துறை ரீதியான வளர்ச்சிப் பணிகள், நிதி நெருக்கடி குறித்தும் விளக்கமளித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இன்று காலை  

சரியாக 10 மணிக்கு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதுமே அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இருப்பினும் பி.டி.ஆர். தொடர்ந்து தன்னுடைய பட்ஜெட் வாசித்துக் கொண்டே இருந்தார், அப்போது பட்ஜெட் கூட்டத் தொடரை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.