தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீ்ட்சிதர் தோட்டத்தைச் சேர்ந்தவர் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன். சகோதர்களான இவர்கள் இருவரும் வீட்டிலேயே தனியார் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தனர்.
மேலும், கும்பகோணம் கொற்கையில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மாடுகளை கொண்டு பால்பண்ணை நடத்தி வருகின்றனர். சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்திருந்தனர், மேலும், கும்பகோணத்தில் விமான பயிற்சி நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வருகின்றனர்.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் பாஜகவில் இணைந்தார். இதில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட வர்த்தக பிரிவு தலைவராக எம்.ஆர்.கணேஷ் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஆறு மாதத்தில் இரட்டிப்பாக பணம் வழங்குவதாக கூறி கும்பகோணம் பகுதியில் உள்ள வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்களிடம் பல நூறு கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் கும்பகோணத்தைச் சேர்ந்த ஜபருல்லா – பைரோஜ்பானு தம்பதியினர் தங்களுக்கு ரூ.15 கோடியை தராமல் கணேஷ் சகோதரர்கள் ஏமாற்றியதாக தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். இதற்கிடையில் கும்பகோணம் பகுதி முழுவதும் ஹெலிகாப்டர் பிரதர்கள் ரூ.600 கோடியை பொதுமக்களிடமிருந்து வசூலித்து ஏமாற்றியதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
இதையடுத்து தஞ்சாவூர் சரக டிஐஜி பிரவேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் கடந்த மூன்று நாட்களாக கும்பகோணத்தில் எம்.ஆர்.கணேஷ் வீடு, நிதி நிறுவனம், பால்பண்ணை ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். மேலும், தலைமறவான எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதனை கைது செய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கும்பகோணம் எம்.ஆர்.கணேஷ் வீட்டிலிருந்த 2 பிஎம் டபிள்யு கார்கள் உள்பட 12 சொகுசு கார்களை போலீஸார் பறிமுதல் செய்து தஞ்சாவூர் டிஐஜி அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
மேலும் மோசடி வழக்கில் நிதி நிறுவன பொது மேலாளர் ஸ்ரீகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களை தேடி வந்த நிலையில், சகோதர்களின் கணக்கராக பணியாற்றிய மீரா,ஸ்ரீதரனை காவல்துறையினர் கும்பகோணம் பேருந்துநிலையத்தில் நள்ளிரவு கைது செய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.