


கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தாலுகா அலுவலகத்திற்குள் புகுந்து ஊழியர்களை மிரட்டி வரும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி தாடகை மலையை ஒட்டிய பகுதி என்பதால் குரங்குகளின் நடமாட்டம் அதிகமான பகுதியாக உள்ளது. பகல் நேரங்களில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து வீடுகளுக்குள் புகுந்து வீட்டில் இருக்கும் பொருட்களை சிதறடித்து சென்று விடுவது வழக்கம். இந்நிலையில் சமீப நாட்களாக பூதப்பாண்டியில் அதிக அளவில் குரங்குகள் நடமாடி வருகின்றன. தற்போது தாலுகா அலுவலகத்தில் ஏராளமான குரங்குகள் ஜன்னல் வழியாக உள்ளே புகுந்து பணியிலிருக்கும் ஊழியர்களை மிரட்டுவது தொடர்கதையாகி வருகிறது. அலுவலகத்தில் இருக்கும் ஃபையில்கள் மற்றும் பொருட்களை சேதப்படுத்துவதும்,பொருட்களை ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்தில் கொண்டு போடுவதும் வாடிக்கையாக வைத்துள்ளது.இதனால் அங்கிருக்கும் பெண் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்களும் மற்றும் வருவாய் துறை அலுவலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


