பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கலகலப்பாக்கிய குடும்ப விழா குடும்ப பிரச்சினைகளை தீர்த்து வைத்த போலீஸார் எடுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கத்தை விட, தோரணங்கள், அலங்கார பூக்கள், பலூன்கள் கட்டப்பட்டு காவல் நிலையத்துக்கு வந்தவர்களை பூக்கள் கொடுத்து வரவேற்று கலகலப்பாக்கினர் போலீஸார்.
பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக புகார் அளித்த பெண்களை வரவழைத்த போலீஸார் அவர்களுக்கும், கணவர்களுக்கும், கணவரின் குடும்பத்தாருக்கும் குடும்ப வாழ்க்கையை விளக்கி கவுன்சிலிங் வழங்கி அவர்களை தம்பதியினராக மீண்டும் சேர்த்து வைத்துள்ளனர்.
இப்படி சேர்த்து வைக்கப்பட்ட தம்பதியினர் மீண்டும் ஒற்றுமையாக வாழ்கிறார்களா என தெரிந்துகொள்ள காவல் நிலையத்தில் குடும்ப விழா நேற்று நடத்தப்பட்டது. இதில் பட்டுக்கோட்டை, திருச்சிறம்பலம், பேராவூரணி, ஒரத்தநாடு பகுதிகளில் உள்ள 10 க்கும் மேற்பட்ட புகார் அளித்த தம்பதியினர் குழந்தைகளோடு வந்திருந்தனர்.
அவர்களை பெண் போலீஸார் ரோஜா, கல்கண்டு, சந்தனம், குங்குமம் கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.
மேலும், தஞ்சாவூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ராஜேஸ்வரி, அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ஏ.ஜெயா, உதவி ஆய்வாளர் லதா ஆகியோர் ” குடும்ப வாழ்வும், விட்டுகொடுத்து வாழ்தலும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர்.
அதே போல், குடும்ப விழாவில் கலந்து கொண்ட பெண்கள் பேசுகையில்: கணவர் குடிக்கு அடிமையாகி தினமும் அடித்ததாகவும், நடத்தையில் சந்தேகப்பட்டது, கணவரது வீட்டினர் வரதட்சினை போன்றவை கேட்டு கொடுமை படுத்தியதாகவும், போலீஸார் கவுன்சிலிங் வழங்கிய பின்னர் அதுபோன்று எந்த சம்பவங்களும் தற்போது நடைபெறவில்லை நாங்கள் குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருகிறோம் என கூறினர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில்: மத்திய மண்டல போலீஸ் ஐஜி பாலகிருஷ்ணன் உத்திரவுப்படி, குடும்ப பிரச்சினைகள் தொடர்பாக புகார் கொடுத்து, தீர்த்து வைக்கப்பட்டவர்களை மீண்டும் வரவழைத்து, தற்போது எப்படி இருக்கிறார்கள் என குடும்ப விழாவாக நடத்த அறிவுரை வழங்கியதன் படி, 10 குடும்பத்தினரை வரவழைத்து அவர்களை ஊக்கப்படுத்தி, குழந்தைகளுக்கு பரிசு பொருட்களை வழங்கினோம். மேலும், அவர்களுக்கு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டு ஒரு நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும்படி செய்தோம். இதனால் பொதுமக்களுக்கும் – போலீஸாருக்கும் இடையே ஒரு நல்லுறவு ஏற்பட்டுள்ளது