தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டி பகுதியிலுள்ள சீதாராம்தாஸ் நகரில் வசித்து வருபவர் ஜாகிர் உசேன் (வயது55)-. இவர் ஆண்டிப்பட்டியில் மீன்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் குடும்பத்துடன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நேற்று அதிகாலை மர்மநபர்கள் பீர் பாட்டிலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீவைத்து ஜாகிர் உசேன் வீட்டில் வீசிவிட்டு சென்றனர். இதில் அதிர்ச்சி அடைந்து எழுந்த ஜாகிர்உசேனின் கால்கள் மற்றும் கைகளில் தீக்காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் காயமடைந்த ஜாகிர் உசேனை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் விசாரணையை தொடங்கினர். மேலும் தேனி மாவட்ட போலீஸ் எஸ்.பி டோங்கிரி பிரவீன் உமேஷ் சம்பவ இடத்தில் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். நள்ளிரவில் மண்ணெண்ணெய் பாட்டிலில் தீவைத்து வீசிய மர்மநபர்கள் யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மர்மநபர்களை கண்டுபிடிக்கும் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஆண்டிப்பட்டியில் பீர் பாட்டில் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.