• Thu. Jun 20th, 2024

அட அடிச்சி தூக்கிட்டீங்க போங்க! இதுதான்யா வளம், வளர்ச்சிக்கான பட்ஜெட் – வைகோ!…

By

Aug 14, 2021

தமிழக சட்டப்பேரவையில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பட்ஜெட் சிறப்பாக அமைந்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். இந்த வேளாண் வரவு செலவு திட்ட அறிக்கையை வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு அர்ப்பணிப்பதாக அமைச்சர் அறிவித்திருப்பதன் மூலம் ஒன்றிய அரசின் வேளாண் பகைச் சட்டங்களை தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஒருபோதும் ஏற்காது என பிரகடனம் செயப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள 19.31 இலட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக்கி, சாகுபடி பரப்பை உயர்த்தவும், உணவு தானிய உற்பத்தியில் 125 மெட்ரிக் கடன் என்ற இலக்கை அடையவும் திட்டம் தீட்டி உள்ளது வரவேற்கத்தக்கது. கடும் நிதி நெருக்கடியிலும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க 4508.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது பாராட்டத்தக்கது.

ஐந்து ஆண்டுகளில் அனைத்துக் கிராமங்களிலும் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் 2500 கிராமங்களில் நீர் ஆதாரங்களை உருவாக்கி, சாகுபடி பரப்பை உயர்த்தும் திட்டம்; நெல் கொள்முதல் விலையை சாதாரண ரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ. 2015 -ம், சன்ன ரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.2060 என உயர்த்தி இருப்பதும், கரும்பு உற்பத்திக்கான ஊக்கத் தொகை டன் ஒன்றுக்கு ரூ.42.50, கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ. 150 வழங்குவதும் விவசாயிகளுக்கு பயன்தரும்.

பாரம்பரிய நெல் வகைகளைத் திரட்டிப் பாதுகாத்து, விதை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் வகையில் நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படுவது சிறப்புக்குரியது. காவிரிப் படுகை வேளாண் பெருமக்கள் மற்றும் வேளாண் தொழிலாளர்கள் வாழ்வு வளம்பெற திருச்சி – நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இடையேயான பகுதியை வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருந் தடமாக அறிவித்திருப்பது திமுக அரசின் தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது.

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மாநில அளவிலான வேளாண் உயர்நிலைக்குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகளுக்கு நம்பிக்கை தருகிறது. மழை நீரை விளைநிலங்களிலேயே சேமிக்க அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபாய் வரை நூறு விழுக்காடு மானியத்துடன் 500 பண்ணைக் குட்டைகள் அமைத்தல்; நீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை தூர் வாரி ஆழப்படுத்தி நீரோட்டத்தை அதிகரிக்கச் செய்தல், முதலமைச்சரின் சூரிய சக்தி பம்ப் செட்டுகள் திட்டம், மானியத்தில் மின் மோட்டார் பம்ப் செட்டுகள் அமைக்க ரூ. 10,000 நிதி உதவி. நுண்ணுயிர் பாசனத்திட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு நூறு விழுக்காடு மானியம், மற்ற விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியம், ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேரில் செயல்படுத்த 982.48 கோடி நிதி ஒதுக்கீடு; உழவர் சந்தைகளைப் புனரமைத்தல்; ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விளை பொருட்களைச் சேமிக்கவும், பரிவர்த்தனை மேற்கொள்ளவும் வசதிகளை செய்து தருதல்; நாற்பது வேளாண் விளைபொருட்களுக்கு ஒரே சீராக உறுதி அறிவிக்கை போன்ற திட்டங்கள் வேளாண் துறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

விவசாயிகளுக்கு ஏற்றுமதி குறித்த விவரங்கள், விற்பனை வாய்ப்புகள், தரச் சான்றுகள் பெறும் முறைகள் போன்றவற்றை ஒருங்கிணைத்து வழங்கிட சென்னை கிண்டியில் ஒரு கோடி மதிப்பில் வேளாண் ஏற்றுமதி சேவை மையம்; முருங்கை ஏற்றுமதி மண்டலம், மதுரையில் முருங்கைக்கு என சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் அமைத்தல், ஒட்டன்சத்திரம், பண்ருட்டி ஆகிய இடங்களில் 10 கோடி ரூபாய் செலவில் குளிர்பதனக் கிடங்குகள் அமைத்தல், நீலகிரியில் ஒருங்கிணைந்த கிராம வேளாண் சந்தை வளாகம், சென்னை கொளத்தூரில் விளைபொருட்கள் மற்றும் மதிப்புக் கூட்டப் பொருள்களுக்கான நவீன விற்பனை மையம், ஈரோடு மாவட்டம் – பவானிசாகரில் மஞ்சள் பயிருக்கான ஆராய்ச்சி மையம், கடலூர் மாவட்டத்தில் பலா சிறப்பு மையம், வடலூரில் புதிதாக அரசு தோட்டக் கலைப் பூங்கா, முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டத் திட்டம் ஆகியவை விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைளை நிறைவேற்றும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள இந்த வரவு செலவுத் திட்டத்தில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் கோவையில் இயற்கை வேளாண்மைக்கான ஆராய்ச்சி மையம் உருவாக்கி இருப்பதும், மண் வளத்தைப் பாதுகாக்க இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 33.03 கோடியில் செயல்படுத்தப்படுவதும், இயற்கை வேளாண்மை, ஏற்றுமதி, புதிய கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாநில அளவிலான பரிசளிக்கும் திட்டமும் வரவேற்கத்தக்கவை.

மூலிகைப் பயிர்கள் சாகுபடி ஊக்குவிப்பு, தோட்டக்கலைப் பயிர்களுக்குச் சிறப்புக் கவனம், பனை வளர்ப்பு மற்றும் பனை தொடர்பான தொழில்களை ஊக்குவிக்க பனை மேம்பாட்டுத் திட்டம், சிறு தானியங்கள், பயிறு வகைகள், பழப் பயிர்கள் சாகுபடி பரப்பை அதிகரித்தல், 50 ஆயிரம் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணஙகள் தொகுப்பு வழங்குதல் போன்றவை வேளாண் தொழிலுக்கு ஊக்கம் அளிக்கும்.

வேளாண்மைத் தொழிலின் மேன்மையை இளைஞர்கள் அறிந்துகொள்ளும் வகையில் சென்னையில் மரபுசார் வேளாண்மைக்கான அருங்காட்சியகம் தொடங்குவது மகிழ்ச்சிக்குரியது. இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல், ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் போன்றவை புதுமையான அறிவிப்புகள்.

உணவு பதப்படுத்துதலுக்குக்காக தனி அமைப்பு, கிருஷ்ணகிரியில் தோட்டக் கலைக் கல்லூரி, கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, மண்ணச்சநல்லூர் பொன்னி அரிசி ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை போன்றவை வரவேற்கத்தக்கன. திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும், வேளாண்மைத் துறையில் புதுமைகளைப் புகுத்தி, வேளாண் தொழில் வளர்ச்சிக்கு வித்திடும் வகையிலும், விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலும் வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கையில் ரூ. 34,220.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது பாராட்டுக்குரியது என வைகோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *