• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவையில் கடும் வெயிலில் பணிபுரியும் காவலர்களுக்கு ..,பழங்களைக் கொடுத்து குளிர்விக்கும் இளைஞர்கள்..!

Byவிஷா

Apr 25, 2023

தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், கோவையில் கடும் வெயிலில் பணிபுரியும் காவலர்களுக்கு இளைஞர்கள் பழங்களைக் கொடுத்து அவர்களைக் குளிர்வித்து வருவது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.
கோவையில் கடந்த வாரத்திலிருந்து சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் அவதியடைந்து வருகிறது. இரண்டு தினங்களாக கோவையில் 100டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது. கொளுத்தும் வெயிலிலும் கோவை மாநகர போலீசார் போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு பணிகளை திறம்பட நிர்வகித்து வருகின்றனர். கோவை மாநகர பகுதியில் உள்ள சிக்னல்களில் போக்குவரத்து காவலர்கள் வெயிலில் நின்று தங்களது பணியைசெய்து வருகின்றனர்.
பொதுமக்கள் பலரும் அவ்வப்போது போலீசாருக்கு குடிநீர் மற்றும் நீர் மோர் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர். இதனிடையே கோவையில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வரும் இளைஞர்கள் இணைந்து தினமும் போலீசாருக்கு பழங்களை வழங்கி வருகின்றனர். கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த ஒரு மாத காலமாக போலீசார் பணிபுரியும் இடத்திற்கே நேரில் சென்று சுமார் 400 கிராம் எடை கொண்ட நெல்லிக்காய், தர்ப்பூசணி, அண்ணாச்சி பழம், பப்பாளி, கேரட், வெள்ளரிக்காய், திராட்சை போன்ற பழங்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி வருகிறனர். வெயிலில் வாடி வதங்கும் போலீசாருக்கு பழங்கள் சற்று புத்துணர்வை கொடுக்கின்றன.
இதுகுறித்து கார்த்திக் கூறுகையில், “நண்பர்கள் 10 பேர் இணைந்து தினமும் போலீசாருக்கு பழங்கள் கொடுத்து உதவி வருகிறோம். தினமும் ஆகும் செலவை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வந்தாலும் இது போல் ஒரு சேவையை மேற்கொண்டால் எங்களைப் பார்த்து மற்றவர்களும் சேவை பணியை தொடர்வார்கள் என்ற நம்பிக்கையோடு பணியை மேற்கொள்கிறோம்” என்றார். இவர்களது சேவையைப் பாராட்டி கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கார்த்திக்கை அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார்.