உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி வரும் ஜனவரி 15-ம் தேதி தை முதல் நாள் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான மரக்கட்டுகளுடன் கூடிய தடுப்பு வேலிகள் மற்றும் பரிசுப்பொருள் வைப்பதற்கான மேடை அமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

அவனியாபுரம் – திருப்பரங்குன்றம் சாலையில் காளைகள் ஓடும் பாதையின் இருபுறமும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சுமார் 8 அடி உயரத்திற்கு மேல் பலமான இரட்டை அடுக்கு மரக்கட்டை வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த கால அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, காளைகள் வேலியைத் தாண்டி மக்கள் பகுதிக்குள் நுழையாதவாறு கூடுதல் இரும்பு கம்பிகள் கொண்டு இந்த வேலிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மதுரை மாநகராட்சி இதற்காக சுமார் 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் ஒதுக்கி, பணிகளை விரைவுபடுத்தியுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேடையின் உறுதித்தன்மையை அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.




