தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள சூழ்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரப்பத்தி பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பாரபத்தி பகுதியில் 2 வது மாநில மாநாடு நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி வருவதால் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல்கள் இருப்பதாகாவும் மாநாடு தேதியை முன்னதாக மாற்றி அமைக்க காவல்துறை அறிவுறுத்தியதாக கூறப்பட்ட நிலையில் மாநாடு ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார்.
மாநாட்டிற்காக கடந்த 16ஆம் தேதி காலை 7 மணிக்கு கட்சி பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் பூமி பூஜை பந்தக்கால் நடப்பட்டது. தவெக இரண்டாவது மாநில மாநாட்டிற்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

500 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் மாநாடு நடைபெறுவதற்காக சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் பிரம்மாண்ட விழா மேடை, விஜய் தனது ரசிகர்களையும் தொண்டர்களையும் நடந்து சென்று சந்திப்பதற்கான Ramp walk நடைமேடை மற்றும் பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் இடத்தில் தடுப்பு வேலி பணிகள், ஒலி ஒளி கருவிகள் பொருத்துவதற்கான கேலரிகள். மாநாட்டின் பிரம்மாண்ட முகப்பு ஆர்ச் போன்ற பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மாநாட்டு திடலில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அமர்வதற்கு இருக்கைகள் அதேபோல மற்ற மாநாடுகளை விட இந்த மாநாட்டில் தண்ணீர் தாகம் ஏற்படாமல் இருப்பதற்காக நிலத்திற்கு அடியில் பைப்புகள் போடப்பட்டு 750 குழாய்கள் அமைக்கப்பட்டு காலை முதல் மாலை வரை தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் வழங்குவதற்கு புதிய திட்டம் மேற்கொள்ளப்பட்டு அந்தப் பணிகளும் விரைவாக நடந்து கொண்டிருக்கிறது.. மேலும் மாநாட்டு திடலை சுற்றி பார்க்கிங் மற்றும் சாலைகளில் 5000லிட்டர் அளவிற்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட சின்டெக்ஸ் தொட்டிகளில் தண்ணீர் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

தென் மாவட்டங்களில் விஜய் பலத்தை நிரூபிக்க நடத்தப்படும் தவெக 2 வது மாநில மாநாடு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியலில் இரண்டு பெரிய திராவிட கட்சிகளும் தேர்வு செய்யாத புதிய ஒரு பிரம்மாண்ட பரப்பளவு கொண்ட ஒரு இடத்தை விஜய் தேர்வு செய்து இந்த மாநாட்டை நடத்துவதற்கு திட்டமிட்ட நிலையில் மாநாட்டிற்கு இன்னும் பத்து நாட்களே உள்ளதால் மாநாடு முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.