மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது மொத்தம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இதில் பேரூராட்சி மூன்றாவது வார்டு பசும்பொன் நகர் வி ஜி மஹால் முன்பு உள்ள வளைவில் ஆபத்தான நிலையில் ஆளை விழுங்கும் வகையில் குண்டும் குழியுமாக சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கர்ப்பிணி தாய்மார்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக இந்த பகுதியில் உள்ள மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் குழந்தைகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு வருவதாக வார்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி துறை இடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர். சில நாட்களுக்கு முன்பு ஆளை விழுங்கும் பள்ளத்தில் கர்ப்பிணி பெண்ணை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்த கணவர் பள்ளத்தில் விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக கர்ப்பிணி பெண் உயிர் தப்பியுள்ளார்.

இது குறித்து அருகில் இருந்தவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களின் நலன் பள்ளி செல்லும் குழந்தைகளின் நலன் கருதி சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.