புதுக்கோட்டை காந்திநகர் ஆறாம் வீதியில் வசித்து வருபவர் மகேந்திரவர்மன். இவர் அந்த பகுதியில் பிரபலமான நபராக இருந்து வருகிறார். அவரும் அவரது குடும்பத்தினரும் இதற்கு முன்பு 7 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் உள்ள ஆயிரம் பேருக்கு பொங்கலுக்கு கரும்பு வெல்லம் சர்க்கரை தேங்காய் உள்ளே பொருட்களை வழங்கி வந்திருக்கிறார்கள்.

இந்த முறை எட்டாவது ஆண்டாக அந்த பகுதியில் உள்ள 1200 பேருக்கு வழங்க திட்டமிடப்பட்டு அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது. மகேந்திரவர்மன் எந்த கட்சியில் இருக்கிறாரோ அந்த கட்சியின் பிரமுகர்களை அழைத்து வந்து இந்த பரிசு பொருட்களை மக்களுக்கு வழங்குவதை வழக்கமாக செய்து கொண்டிருக்கிறார். கடந்தாண்டு நடைபெற்ற விழாவில் திமுக அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் போன்றவர்களை வைத்து இந்த விழாவை நடத்திய நிலையில் இந்த ஆண்டு பொங்கல் விழாவை எட்டாவது ஆண்டாக கொண்டாடும் விதமாக தமிழக வெற்றி கழகத்தின் புதுக்கோட்டை மத்திய மாவட்ட செயலாளர் பர்வேஸ் அவர்களையும் அக்கட்சியின் பிரமுகர்களையும் அழைத்து வந்து விழா நடத்த ஏற்பாடு செய்திருந்தார்.
தற்போது மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக்கழகம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் அவர்கள் கையால் பரிசு பொருளை வாங்குவதற்கு ஆயிரக்கணக்கான பெண்கள் கூடி வந்து நின்றனர். மகேந்திர வர்மனின் வீட்டு வாசலில் பந்தல் அமைத்து லாரியில் கரும்புக் கட்டுகளை கொண்டு வந்து இறக்கி வைத்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இரண்டு கிலோ பச்சரிசி ஒரு கிலோ வெல்லம் இரண்டு தேங்காய் இரண்டு கரும்பு ஒரு பிளாஸ்டிக் குடம் என பொங்கல் பரிசாக அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி தனக்கு பெரும்பேறாக கிடைத்த மகிழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் மத்திய மாவட்ட செயலாளர் பர்வேஸ் அனைவருக்கும் நீண்ட நேரம் நின்று தனது கையாலேயே இந்த பரிசு பொருட்களை வழங்கி சிறப்பித்தார்.

அப்போது அங்கு கைக்குழந்தையுடன் வந்த ஒரு பெண் தனது குழந்தைக்கு பெயர் வைக்குமாறு கேட்டுக் கொண்டார். குழந்தையை வாங்கிக் கொஞ்சிய பர்வேஸ் அந்த குழந்தைக்கு விஜய் என்று பெயரிட்டார். பெயர் வைத்ததோடு மட்டுமல்லாத அந்த குழந்தையின் கையில் பணமும் பரிசு பொருளாக கொடுத்து மகிழ்ச்சியோடு அனுப்பி வைத்தார். அவர் கையால் பொங்கல் பரிசு பெயர் வைத்த மகிழ்ச்சியும் பணமும் கிடைத்த மகிழ்ச்சியில் குழந்தை வாங்கிக் கொண்டு அந்த தாய் சென்றார்.




