

உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப். 24-ஆம் தேதி போர் தொடுத்தது. தலைநகா் கீவை சுற்றிவளைத்து ரஷிய படையினா் தாக்குதல் நடத்தி வருகின்றனா். ஆனால், அங்கு உக்ரைன் துருப்புகளின் கடுமையான பதிலடி காரணமாக ரஷிய படையினரால் தலைநகருக்குள் இதுவரை நுழைய முடியவில்லை.
இதையடுத்து, நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள நகரங்களில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது ரஷியா. இதனால் உயிருக்கு அஞ்சி அந்த நாட்டிலிருந்து அகதிகளாக வெளியேறும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுவரை 15 லட்சம் அகதிகள் உக்ரைன் எல்லைகளைக் கடந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பின் ஆணையா் ஃபிலிப்போ கிராண்டி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
உக்ரைனில் 12ஆவது நாளாக ரஷியப் படைகள் தனது தாக்குதலை தொடர்ந்து வரும் நிலையில் பிரதமர் பேசவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.