நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பெரும்பாலாக வனப்பகுதிகள் உள்ளதால் வனவிலங்குகள் அதிகமாக உலா வருகின்றன. உதகையை ஒட்டியுள்ள முதுமலை வனப்பகுதியில் இருந்து உணவு தண்ணீர் தேடி இடம்பெயரும் வனவிலங்குகள் உதகையை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சுற்றித் திரிகின்றன.

குறிப்பாக உதகையை சுற்றியுள்ள பகுதியில் தற்போது காட்டு யானை நடமாட்டம் காணப்படுகிறது கடந்த சில நாட்களுக்கு முன்பு உதகை அருகே சோலூர் பகுதிக்கு செல்லும் சாலையில் தேயிலை தோட்டத்தில் உலா வந்த காட்டு யானையைக் கண்டு மக்கள் அச்சமடைந்திருந்தனர். பின்பு அதே கிராமப் பகுதியில் இரவு நேரத்தில் விலை நிலங்களை காட்டு யானை சேதப்படுத்தியதால் மக்கள் தொடர்ந்து அச்சமடைந்து வந்தனர்.
இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகமாக செல்லக்கூடிய பைக்காரா படகு இல்ல சாலையில் காட்டு யானை முகாமிட்டது. இதனை கண்ட சுற்றுலா பயணிகள் வீடியோ பதிவு செய்தனர். அப்போது கோபமடைந்த காட்டு யானை திடீரென பிளிறி கொண்டு வனப்பகுதிக்குள் ஓடியது. தற்போது காட்டு யானை நடமாடி வரும் பகுதிகளில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .