• Tue. Feb 3rd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

கணவரைச் சந்திக்க துபாய் புறப்பட இருந்த மனைவி விபத்தில் உயிரிழப்பு!!

ByPrabhu Sekar

Feb 3, 2026

சென்னை அடுத்த தாம்பரம் பகுதியில் நேற்று நடைபெற்ற கோர சாலை விபத்தில், கணவரைச் சந்திக்க துபாய் செல்லத் தயாராக இருந்த மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

படப்பை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த வர்ஷா (36). இவரது கணவர் மதன் (40) துபாயில் பணியாற்றி வருகிறார். கணவரைச் சந்திக்க நேற்று இரவே துபாய் புறப்படுவதற்கான ஏற்பாடுகளில் இருந்த வர்ஷா, தாம்பரம் கிருஷ்ணநகர் பகுதியில் உள்ள அடகு கடைக்கு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது பார்வதி நகர் அருகே, உரிய அனுமதியின்றி பயணிகளை ஏற்றிச் சென்ற டாட்டா மேஜிக் வாகனத்தின் கதவை, குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் தேசிங்கு ராஜா என்பவர் திடீரென வலது புறமாக திறந்துள்ளார். இதில் மோதிய வர்ஷா நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அதே நேரத்தில் டைல்ஸ் கற்களை ஏற்றிச் சென்ற மற்றொரு வேன் அவர் மீது ஏறி இறங்கியதில், வர்ஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

டாட்டா மேஜிக் ஓட்டுநர் தேசிங்கு ராஜா, ஏழு ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோன்ற முறையில் வாகனத்தின் கதவைத் திறந்து போலீஸ் சீருடையில் இருந்த காவலரை கீழே தள்ளி தாக்க முயன்றதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். மேலும், அனுமதி இல்லாத இவ்வகை வாகனங்கள் பொதுமக்களை ஏற்றி அதிக கட்டணம் கேட்டு, வாக்குவாதம் மற்றும் கொலை மிரட்டல் மூலம் அச்சுறுத்துவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவத்தில் தொடர்புடைய வேன் ஓட்டுநர் கோவிந்த் சிங் மற்றும் டாட்டா மேஜிக் ஓட்டுநர் தேசிங்கு ராஜா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவரைச் சந்திக்க புறப்பட இருந்த தருணத்தில் நிகழ்ந்த இந்த விபத்து, குடும்பத்தினரையும் அந்தப் பகுதி மக்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.